Enable Javscript for better performance
கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய ஆதரவு தாருங்கள்: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா- Dinamani

சுடச்சுட

  

  கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய ஆதரவு தாருங்கள்: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா

  By பெங்களூரு  |   Published on : 28th November 2016 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய ஆதரவு தாருங்கள் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்தார்.
   பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பா.ஜ.க.வின் பிற்படுத்தப்பட்டோர் மாநில மாநாட்டை முரசு கொட்டித் தொடக்கிவைத்து அவர் பேசியது: நமது நாடு வளம் பெறவேண்டுமென்றால், வரி செலுத்த வேண்டும். வரி செலுத்தாமல் பணத்தை ஓரிடத்தில் குவித்து வைத்தால் அது நாட்டுக்குப் பயன்படாத கருப்புப் பணமாக மாறி விடுகிறது. நாட்டின் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருக்கும் கருப்புப் பணத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிப்பதற்காக நமது பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நடவடிக்கைதான் 500, 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக அறிவித்தது.
   நாட்டு நலம் நாடும் மக்கள் அனைவரும் பிரதமர் மோடியின் நடவடிக்கையை மனதாரப் பாராட்டுகிறார்கள், வரவேற்கிறார்கள். ஆனால், கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் கொள்ளையர்கள் பிரதமர் மோடியை வசை பாடுகிறார்கள். நவ.7-ஆம் தேதி வரை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை திரும்பக் கொண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜவாதி கட்சி, காங்கிரஸ், மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
   ஆனால் நவ.8-ஆம் தேதி பிரதமர் மோடி, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த இரவு முதல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் தூக்கத்தை இழந்து தவித்து வருவதோடு, தங்கள் முகத்தின் பொலிவையும் இழந்து நிற்கிறார்கள்.
   மேலும், எதற்காக உயர் மதிப்பு செலாவணிகளை செல்லாததாக அறிவித்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள். இந்தத் தலைவர்கள் எல்லாம் கருப்புப் பணத்தை இழந்த தவிப்பில் பிரதமர் மோடியை கடுமையாகத் தாக்கிப் பேசி வருகிறார்கள். வெள்ளம் சூழ்ந்த நிலையில் நடுவில் ஒரு மரம் தென்படுகிறது. வெள்ள நீரில் இருந்து தற்காத்துக் கொள்ள அந்த மரத்தின் மீது ஏறி எலி, பூனை, கீரிப்பிள்ளை, பாம்பு ஆகியவை அடைக்கலம் தேடுகின்றன. இதில் விசித்திரம் என்னவெனில், கீரிப்பிள்ளை பாம்புவையும், பூனை எலியையும் கொன்று தின்பதில்லை. ஊழலை, கருப்புப் பணத்தை ஒழிக்க போர் தொடுத்திருக்கும் பிரதமர் மோடியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டிருக்கிறார்கள்.
   எனினும், பிரதமர் மோடியின் முயற்சிக்கு பிகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளது ஆறுதலாக உள்ளது. இதற்காக நிதீஷ்குமாருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
   கர்நாடகத்தில் கடந்த மூன்றரை ஆண்டு காலமாக ஊழல் படிந்த காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, நாட்டிலேயே அதிகம் ஊழல் நிறைந்த அரசாக உள்ளது. காங்கிரஸின் ஊழல் ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு, கர்நாடகத்தில் மீண்டும் பாஜகவின் நல்லாட்சியை உருவாக்க மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 2018-ஆம் ஆண்டில் நடக்கவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி மலர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் மக்களுக்கு நல்லாட்சி வழங்க இயலும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
   இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் அனந்த்குமார், சதானந்த கெüடா, சித்தேஸ்வர், பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, பேரவை எதிர்க் கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர்,மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai