Enable Javscript for better performance
காகிதப் பணத்தை ஒழித்துவிடலாம் என்பது வெறும் மாயை: முன்னாள் பிரதமர் தேவகெளடா- Dinamani

சுடச்சுட

    

    காகிதப் பணத்தை ஒழித்துவிடலாம் என்பது வெறும் மாயை: முன்னாள் பிரதமர் தேவகெளடா

    By சிவமொக்கா  |   Published on : 28th November 2016 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    deva

    இந்தியாவில் காகிதப் பணத்தை ஒழித்துவிடலாம் என்பது வெறும் மாயை மட்டுமே என்று முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவகெளடா தெரிவித்தார்.
     இதுகுறித்து சிவமொக்காவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: எதிர்காலத்தில் காகிதப் பணமில்லா பரிமாற்றத்துக்கு மக்கள் தயாராக வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். நாட்டில் உள்ள அனைவருக்கும் மின்னணுக் கருவிகளை வைத்துக் கொள்ளும் வசதி வாய்ப்பு இல்லாதிருப்பதை பிரதமர் மோடி உணர வேண்டும். 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதென அறிவித்துள்ள பிரதமர் மோடியின் நடவடிக்கை ஊரகப் பொருளாதாரத்தில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைக் கவனிக்க வேண்டும். காகிதப் பணமில்லா பரிமாற்றத்தை செயல்படுத்துவது கடினமாகும்.
     இந்திய நாட்டில் காகிதப் பணத்தையும், ஜாதியையும் ஒழித்துவிடலாம் என்பது வெறும் மாயை மட்டுமே. ரூபாய் செலாவணிகளை செல்லாதென அறிவித்ததற்கு மஜதவின் எதிர்ப்பு எதுவுமில்லை. ஆனால் முன்யோசனை இல்லாமல் செயல்படுத்தியதை தான் நாங்கள் குறைகூறுகிறோம். செலாவணிக்கு தடை விதிக்கும் முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக தனது அமைச்சரவை சகாக்களின் ஆலோசனையை பிரதமர் மோடி பெற்றிருக்கலாம். சரியான திட்டமிடல் இல்லாததால், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
     முன் தயாரிப்பு இல்லாததால் வருமான வரிச் சட்டத்தில் அவசரமாக திருத்தம் செய்துவிட்டனர். எதிர்க்கட்சிகளை சமாளிக்க முடியாததால், நாடாளுமன்றத்துக்கு வர பிரதமர் மோடி தயக்கம் காட்டுகிறார். செலாவணிக்கு தடை விதித்ததை திட்டமிட்ட கொள்ளை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
     கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதில் பெரும்பாலான வங்கியாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒரு சிலருக்கு செலாவணி தடை மற்றும் புதிய செலாவணி அறிமுகம் குறித்து அறிந்திருந்ததால், கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி விட்டதாகக் கூறுகிறார்கள். சாதாரண குடிமக்கள் நாளொன்றுக்கு ரூ.2 ஆயிரம் பெறுவதில் சிரமம் இருக்கும் போது ஒரு சிலருக்கு மட்டும் எப்படி கோடிக்கணக்கில் புதிய ரூபாய் செலாவணிகள் கிடைத்துள்ளன.
     1978-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமரான மொரார்ஜி தேசாயும் உயர்மதிப்பு செலாவணிகளை செல்லாததாக அறிவித்தார். அப்போது உயர் மதிப்பு செலாவணிகளின் புழக்கம் 2 சதமாக இருந்தது. ஆனால் தற்போது உயர்மதிப்பு செலாவணிகள் 86 சதமாக உள்ளது. இவ்வளவு உயர்மதிப்பு பணத்தை ஒரே இரவில் மாற்றிவிட முடியாது. எனவே, இயல்புநிலைக்குத் திரும்ப குறைந்தது 7 மாதங்கள் முதல் ஓராண்டு ஆகும் என்றார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai