Enable Javscript for better performance
காவிரி உயர் தொழில்நுட்பக் குழுவிடம் கர்நாடக அமைச்சர் விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி உயர் தொழில்நுட்பக் குழுவிடம் கர்நாடக அமைச்சர் விளக்கம்

    By DIN  |   Published on : 08th October 2016 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள காவிரி உயர் தொழில்நுட்பக் குழுவிடம் மாநில நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் விளக்கமளித்தார்.
    பெங்களூரு விதான செளதாவில் வெள்ளிக்கிழமை மத்திய தண்ணீர் ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையிலான காவிரி உயர் தொழில்நுட்பக் குழுவினரைச் சந்தித்து காவிரி நதிப்படுகையில் உள்ள அணைகளின் நீர் இருப்பு, பாசன பரப்பு, விவசாயிகளின் தண்ணீர் தேவை குறித்து விளக்கமளித்த பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியது:
    கர்நாடகத்தில் காவிரி நதிப்படுகையில் உள்ள அணைகளையும், பாசனப் பகுதிகளையும் பார்வையிடுவதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அமைத்துள்ள காவிரி உயர் தொழில்நுட்பக் குழு பெங்களூரு வந்துள்ளது.
    மத்திய தண்ணீர் ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையிலான இந்தக் குழுவினரை வெள்ளிக்கிழமை சந்தித்து காவிரி நதிப்படுகை நிலையை விளக்கமாக எடுத்துரைத்துள்ளேன். காவிரி நதிப்படுகையில் குறைந்த மழைப் பொழிவு, பயிர் சாகுபடி நிலை,விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள், தென்மேற்குப் பருவமழை குறைவால் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய குடிநீர்ப் பிரச்னை குறித்து உயர் தொழில்நுட்பக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.
    அடுத்த ஆண்டு கோடைகாலம் வரை காவிரி நதிப்படுகை பகுதிகளில் குடிநீருக்கும், பாசனத்திற்கும் 67.18 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், காவிரி நதிப்படுகையில் உள்ள 4 அணைகளிலும் 32.04 டிஎம்சி தண்ணீர் மட்டுமேஇருப்பு உள்ளது.
    அடுத்த ஆண்டு மே வரையில் கூடுதலாக 15.17 டிஎம்சி தண்ணீர் வரத்து இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கர்நாடகத்திற்கு 20 டிஎம்சி தண்ணீர் குறைபாடு ஏற்படும் வாய்ப்புள்ளது.
    இதனால், குறைந்த அளவு பாசனநீர் தேவைப்படும் பயிரை சாகுபடி செய்யும்படி விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நதிப்படுகை பகுதிகளான பெங்களூரு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட நகரங்கள், கிராமங்களுக்கு அடுத்த ஆண்டு மே வரை குடிநீர் வழங்க 23.05 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது.
    தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை என்பதை எடுத்துரைத்துள்ளேன். காவிரி நதிப்படுகையில் 18.5 ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், மழையில்லாததால் நிகழ் பருவத்தில் 6.15 லட்சம் ஏக்கரில் மட்டும் பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. இதில் 1.88 ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகின.
    கர்நாடகத்தில் நிலவும் இதுபோன்ற நிலை தமிழகத்தில் இல்லை. அங்குள்ள மேட்டூர் அணையில் சம்பா சாகுபடிக்குத் தேவைப்படும் தண்ணீர் இருப்புள்ளது. அதுமட்டுமல்லாமல், அம்மாநிலத்தின் காவிரி நதிப்படுகையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நல்லமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது என்ற விவரங்களையும் உயர் தொழில்நுட்பக் குழுவிடம் விளக்கமாக தெரிவித்துள்ளேன் என்றார்.
    முன்னதாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கர்நாடகத்தின் சார்பில் அரசு தலைமைச் செயலாளர் சுபாஷ்சந்திர குன்ட்டியா, கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வளர்ச்சி ஆணையரான லதா கிருஷ்ணராவ், முதல்வரின் முதன்மைச் செயலாளர் எச்.கே.அதீக், முன்னாள் அரசு தலைமைச் செயலாளர் அரவிந்த்ஜாதவ், நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர் ராகேஷ்சிங், காவிரி நீர்ப்பாசனக் கழகத்தின் மேலாண் இயக்குநர் சிக்கராயப்பா மற்றும் நீர்வளத் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai