Enable Javscript for better performance
மழைக் குறைவு மட்டுமே வறட்சிக்கு காரணமல்ல: கர்நாடக அரசுத் துறை நிபுணர்கள் கருத்து- Dinamani

சுடச்சுட

    

    மழைக் குறைவு மட்டுமே வறட்சிக்கு காரணமல்ல: கர்நாடக அரசுத் துறை நிபுணர்கள் கருத்து

    By DIN  |   Published on : 08th October 2016 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் நிலவும் வறட்சிக்கு மழைக் குறைவு மட்டும் காரணமல்ல, வேறுசில காரணங்களும் உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    இந்திய அளவில் வறண்ட மாநிலமாக ராஜஸ்தானுக்கு அடுத்து கர்நாடகம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தென்மேற்குப் பருவமழை 4 ஆண்டுகளாக பெய்யவில்லை. 2012 முதலே கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட குறைவாக பெய்து வருகிறது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக சராசரியாக 100 வட்டங்கள் வறட்சிப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
    நிகழ் நிதியாண்டில் இதுவரை 110 வட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் 132 வட்டங்கள் வறட்சிப் பகுதியாக கண்டறியப்பட்டிருந்தது.
    கர்நாடகத்தில் நிலவும் வறட்சிக்கு மழைப்பொழிவு குறைவு மட்டுமே காரணமாக கூறிவிட முடியாது. இதுதவிர, காடு அழிப்பு, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடிநீர் சுரண்டப்படுவது, பயிர் சுழற்சி முறை போன்ற காரணங்களும் வறட்சிக்கு துணை நிற்பதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
    கர்நாடகத்தில் ஜூன் 1 முதல் செப்.30-ஆம் தேதி வரையிலான 4 மாதங்களை தென்மேற்குப் பருவமழை காலம் என்று அழைக்கிறோம். இந்த மாதங்களில்தான் கர்நாடகத்தில் கணிசமாக மழை பெய்யும்.
    கடந்த 4 ஆண்டுகளில் 400 வட்டங்களில் வறட்சி நிலவி வந்துள்ளது. இதில் பெரும்பாலான வட்டங்கள், தொடர்ச்சியாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக 4 வாரங்களுக்கு 20 சதத்திற்கும் குறைவான மழை பெய்தாலோ, ஈரப்பத்தின் அளவு 50 சதத்திற்கும் குறைவாக இருந்தாலோ அந்த பகுதியை ஓராண்டுக்கு வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அரசு அறிவிக்கிறது என்று வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
    வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மழை பொய்த்துப் போவதற்கும், ஈரப்பதம் குறைந்துள்ளதற்கும் காடு அழிப்பு மற்றும் பயிர் சுழற்சி முறையும் காரணம் என்கிறார்.
    வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையின் பேராசிரியர் குண்டப்பா ஜி.கடல்லி கூறுகையில், மழை அல்லாது வேறுபல காரணங்களும் மண் ஈரப்பதம் குறைவுக்கு காரணங்களாக உள்ளன. அதிகளவில் ஆழ்த்துளைக் கிணறுகளை வெட்டுவதன் மூலம் நிலத்தடிநீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுகிறது. இது மண்ணின் ஈரப்பதத்தை சுரண்டிவிடும் என்றார்.
    வேளாண் வானிலை அறிஞரான எம்.பி.ராஜே கெளடா, வறட்சிக்கு முக்கிய காரணம் மழை குறைப்பாடுதான். பயிர்சுழற்சி முறையைக் கடைப்பிடிப்பதாலும், விதைப்பு மற்றும் சாகுபடி காலத்தை மாற்றியமைப்பதன் மூலமும் மழைப்பொழிவு குறைவால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத்த இயலும்.
    ஒரே பயிரை தொடர்ச்சியாக இருமுறை பயிரிடுவதால், வறட்சியின் போது கடும்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.
    கர்நாடகத்தில் 2012-13-ஆம் ஆண்டில் 125 வட்டங்கள், 2013-14-இல் 35 வட்டங்கள், 2014-15-இல் 137 வட்டங்கள், 2015-16-இல் 110 வட்டங்கள் வறட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தன.
    வறட்சியின் பாதிப்பை குறைக்க காடு அழிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும். பயிர் முறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேளாண் துறை முயற்சிகளை எடுக்க வேண்டும். மேலும் ஆழ்த்துளைக் கிணறுகளை கண்டிப்பாக தோண்டக் கூடாது. இதை கடைப்பிடித்தால் வறட்சியின் தாக்கத்தை மட்டுமல்ல, மழை குறைவும் தவிர்க்க முடியும் என்று கூறுகின்றனர் வேளாண் துறை அதிகாரிகள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai