Enable Javscript for better performance
வாகன வரியைச் செலுத்த புதிய இணையதளம் அறிமுகம்- Dinamani

சுடச்சுட

    

    வாகன வரியைச் செலுத்துவதற்காக புதிய இணையதளத்தை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தொடக்கிவைத்தார்.
    பெங்களூரு சாந்திநகர் போக்குவரத்துத்துறை ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறைக்காக  புதிய இணையதளத்தை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தொடக்கிவைத்தார்.
    இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
    மக்களோடு அதிகமாக இணைந்திருக்கும் போக்குவரத்துத் துறையில் ஒளிவுமறைவற்ற சேவைகளை வழங்கும் நோக்கத்தில் புதிய இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறைக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு வாகன வரி உள்ளிட்ட வரி வருவாய் உள்ளது.
    இதை முறைபடுத்த இணையதளத்தில் வாகனவரிச் செலுத்தும் வசதியை இணையதளத்தில் சேர்த்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, வாகன ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு, பதிவு முகவரி மாற்றம், உரிமம் புதுப்பித்தல் போன்ற 25 சேவைகளையும் பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
    இதன்மூலம் போக்குவரத்துத் துறை சேவைகளை எளிமையாக மக்களிடம் கொண்டு சென்றுள்ளோம். புதிய இணையதளத்தின் மூலம் தேவையில்லாமல் அலுவலகங்களுக்கு மக்கள் அலைந்து திரிவதும் தவிர்க்கப்படும்.
    கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் இணையதளத்தை படிக்கலாம். இதுதவிர, போக்குவரத்துத் துறைக்கு முகநூல், சுட்டுரை கணக்குகளையும் தொடங்கியுள்ளோம். இதன்மூலம் போக்குவரத்துத் துறையின் சேவைகளை பொதுமக்கள் தெரிந்து கொள்வதோடு, ஆலோசனைகளையும் வழங்கலாம்.
    காவிரி கலவரத்தின் போது கர்நாடகம்-தமிழகம் இடையிலான சாலை அடைக்கப்பட்டிருந்தது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் கர்நாடகத்திற்குள்ளும், கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் தமிழகத்திற்குள்ளும் அனுமதிக்கப்படவில்லை. இதைத் தவிர்க்க பதிவு எண்ணை மாற்றிக் கொண்ட நிகழ்வுகள் நடந்துள்ளன.
    இதுதொடர்பாக 5 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லைப் பகுதியில் மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கியுள்ளன. இதனால், பதிவு எண்ணை மாற்றிக் கொண்டால், அப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai