Enable Javscript for better performance
வாரியம், கழகங்களுக்கு விரைவில் தலைவர்கள் நியமனம்: சித்தராமையா- Dinamani

சுடச்சுட

    

    வாரியம், கழகங்களுக்கு விரைவில் தலைவர்கள் நியமனம்: சித்தராமையா

    By DIN  |   Published on : 08th October 2016 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தசரா திருவிழாவிற்குப் பிறகு வாரியம், கழங்களுக்குத் தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
    மைசூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
    மாநிலத்தின் பல்வேறு வாரியம், கழங்கங்களின் தலைவர்களின் பதவிக் காலம் அண்மையில் முடிவடைந்தது. இதையொட்டி வாரியம், கழங்கங்களில் தலைவர் பதவிகள் காலியாக உள்ளன. காலியாக உள்ள பதவிகளுக்கு தசரா திருவிழாவிற்கு பிறகு தலைவர்களை நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
    தலைவர்கள் பதவிக்கு உரியவர்களைத் தேர்வு செய்து, அந்த பட்டியலை மேலிடத் தலைவர்களிடம் காண்பித்து, அவர்களது ஆலோசனையின் பேரில் தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
    மாநிலத்தில் 110 வட்டங்களில் வறட்சி நிலவி வருகிறது. வறட்சி நிலையைக் கண்டறிய, மத்திய, மாநில அரசுகள் அதிகாரிகள் கொண்ட குழு இணைந்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம்.
    வறட்சிக்கு மத்திய அரசு கூடுதலான நிவாரண நிதி வழங்க கோரிக்கை வைக்கப்படும். காவிரி நதிப்படுகை அணைகளை ஆய்வு செய்ய மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையிலான குழு கர்நாடகத்திற்கு வந்துள்ளது. அந்தக் குழுவின் கவனத்திற்கு அணைகளின் நீர்மட்டம், பயிர் சேதம் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றார்.


    தொழில்முனைப்பாற்றல்மேம்பாட்டு பயிற்சி
    பெங்களூரில் வரும் நவ.2 முதல் 4 வாரங்களுக்கு தொழில்முனைப்பாற்றல் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
    மத்திய அரசின் காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரில் உள்ள மத்திய அரசின் காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம், இளைஞர்களிடையே தொழில்முனைப்பாற்றலை மேம்படுத்தி வருகிறது.
    அதன்படி, அடுமனை திறன் மற்றும் தொழில்முனைப்பாற்றல் மேம்பாட்டு பயிற்சி முகாமில் பெண்கள், தனிநபர்கள், குழுக்கள், தன்னார்வலர்கள், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். 4 வாரங்கள் நடக்கவிருக்கும் இந்த பயிற்சி முகாம் பெங்களூரு, தும்கூரு சாலை, ஜாலஹள்ளி குறுக்குத்தெரு, எஸ்.எம்.தெருவில் உள்ள டிஏஎஸ்இ வளாகத்தில் நவ.2-ஆம் தேதி தொடங்குகிறது.அடுமனை அறிவியல், வணிக மேலாண் கொள்கைகள் தவிர, நேரடி பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 25 நபர்கள் மட்டுமே முகாமில் கலந்து கொள்ளலாம் என்பதால், ஆர்வமுள்ளோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    பயிற்சியின் முடிவில் சொந்தமாக தொழில் தொடங்க தேவையான அனைத்து உதவிகள், வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9008575588, 9886737555 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    "காவிரி விவகாரத்தால் மது விற்பனை பாதிப்பு'
    காவிரி விவகாரத்தால் கர்நாடகத்தில் மது விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக கலால் துறை அமைச்சர் எச்.ஒய்.மேட்டி தெரிவித்தார்.
    இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நிகழாண்டில் மது விற்பனை இலக்கு ரூ. 16,500 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஒரு மாதமாக காவிரி விவகாரத்தால் மது விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
    கடந்த ஆண்டில் ரூ. 15,200 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதைவிட ரூ. 113 கோடி கூடுதலாக வருவாய்க் கிடைத்தது. காவிரி விவகாரத்தால் இந்த ஆண்டு நிர்ணயித்த இலக்கை எட்டுவது கடினமாகியுள்ளது.
    இரவு 1 மணி வரை பெங்களூரில் நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட பார்களில் மது அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை மற்ற நகரங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டம் எதுவுமில்லை. கர்நாடகத்தில் மது விற்பனையைத் தடை செய்யும் திட்டம் அரசுக்கில்லை என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai