Enable Javscript for better performance
நஞ்சன்கூடு தொகுதி இடைத் தேர்தல்: அரசியல் கட்சிகள் தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    நஞ்சன்கூடு தொகுதி இடைத் தேர்தல்: அரசியல் கட்சிகள் தீவிரம்

    By மைசூரு,  |   Published on : 15th October 2016 11:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நஞ்சன்கூடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமடைந்துள்ளன.
     2018,மே மாதத்தில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலை குறிவைத்து ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான பாஜக,மஜத ஆகியவை பிரசாரங்களை ஏற்கெனவே தொடங்கியுள்ளன. இந்த நிலையில், முதல்வர் சித்தராமையாவின் கோபத்திற்கு ஆளாகி அமைச்சரவையில் இருந்து திடீரென கைவிடப்பட்டதால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நஞ்சன்கூடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வி.சீனிவாஸ்பிரசாத் மனம் வேதனை அடைந்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளோடு தனது எம்எல்ஏ பதவியை அக்.17-ஆம் தேதி ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.
     இதையடுத்து, மைசூரு மாவட்டத்தில் உள்ள நஞ்சன்கூடு சட்டப்பேரவைத் தொகுதியில் அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடக்கும் வாய்ப்புள்ளது. பொதுத் தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில், இடைத் தேர்தலில் வெளியாகும் முடிவு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் விளைவுகளை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் கணக்கு போட்டு வருகின்றன.
     எனவே, சீனிவாஸ் பிரசாத்தை தங்கள் கட்சிக்கு இழுத்து வேட்பாளராக அறிவிக்க பாஜக, மஜத ஆகிய கட்சிகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. எந்த கட்சியிலும் சேராமல் சுயேச்சையாக நின்று தனது சொந்த பலத்தை காட்டவும் சீனிவாஸ் பிரசாத் யோசித்து வருகிறார்.
     இதனிடையே, தனது சொந்த மாவட்டமான மைசூரில் நடக்கவிருக்கும் நஞ்சன்கூடு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறாவிடில் அது அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலையை உருவாக்கிவிடும் என்று அஞ்சும் முதல்வர் சித்தராமையா, சீனிவாஸ் பிரசாத்தை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான சூழலை உருவாக்கத் திட்டம் வகுத்து வருகிறார்.
     இதேபோல, சொந்த மாவட்டத்தில் முதல்வர் சித்தராமையாவின் செல்வாக்கை
     முனைமழுங்க செய்யும் நோக்கில் சுயேச்சையாக நின்றாலும் சீனிவாஸ் பிரசாத்தை ஆதரிப்பது குறித்து பாஜக, மஜத ஆகிய கட்சிகள் யோசித்து வருகின்றன.
     2018-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என கூறிவரும் முதல்வர் சித்தராமையா, நஞ்சன்கூடு இடைத்தேர்தல் முடிவை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முன்னேற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்.
     தனித் தொகுதியான நஞ்சன்கூடில் லிங்காயத்துகள், தாழ்த்தப்பட்டோர், நாயக்கர்கள் மற்றும் சிறிய அளவில் பிற்படுத்தப்பட்டோர் வசித்து வருகிறார்கள். சித்தராமையா அரசில் அமைச்சராக இருந்தபோது சீனிவாஸ் பிரசாத், தனது தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளார். அரசு பியூ கல்லூரி, பட்டக்கல்லூரி, அம்பேத்கர் பவன், நவீன பேருந்து நிலையம், குடிநீர் வசதி, சாலை, தோட்டக்கலை பூங்கா, சிறிய விதானசெüதா கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சீனிவாஸ்பிரசாத் செய்து மக்களின் வரவேற்பை பெற்றுவந்துள்ளார்.
     இதனிடையே, நஞ்சன்கூடு தொகுதியை தக்கவைக்கும் நோக்கத்தோடும் சீனிவாஸ் பிரசாத்தை தோற்கடிக்கும் திட்டத்தோடும் இந்தத் தொகுதியில் முதல்கட்டமாக ரூ.100கோடி அளவுக்கு வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த சித்தராமையா திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
     பொதுப்பணித் துறை அமைச்சர் எச்.சி.மகாதேவப்பாவின் பொறுப்பில் வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த முடிவு செய்துள்ள சித்தராமையா, அதற்கான நிதியை உடனடியாக விடுவிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
     முக்கியத் துறைகளின் அமைச்சர்களை இந்தத் தொகுதிக்கு அடிக்கடி அனுப்பி காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான சூழலை உருவாக்கவும் சித்தராமையா வியூகம் அமைத்துள்ளார். இதை முறியடிக்க பாஜக, மஜத மற்றும் சீனிவாஸ் பிரசாத்தும் திட்டம் வகுத்துச் செயல்படுகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai