Enable Javscript for better performance
பெங்களூரு மண்டலத்தில் கடவுச்சீட்டு பெறும் நடைமுறை முழுவதும் கணினிமயமாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு மண்டலத்தில் கடவுச்சீட்டு பெறும் நடைமுறை முழுவதும் கணினிமயமாக்கல்

    By பெங்களூரு,  |   Published on : 15th October 2016 11:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடவுச்சீட்டு பெறுவதற்கான விண்ணப்பங்களை காவல் துறை சரிபார்க்கும் நடைமுறை உள்பட அனைத்து நடைமுறைகளையும் கணினிமயமாக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு மண்டல கடவுச்சீட்டு அதிகாரி பி.எஸ்.கார்த்திகேயன் தெரிவித்தார்.
     இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
     பெங்களூரு மண்டல கடவுச்சீட்டு அலுவலகம், கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. எங்கள் அலுவலகத்தில் 163 பேருக்குப் பதிலாக 85 பேர் பணியாற்றினாலும், ஊழியர்களுக்குத் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்த ஊக்கம், அடிப்படை வசதிகள் போன்ற காரணங்களால் கடவுச்சீட்டு விண்ணப்பங்களைப் பெற்று, பரிசீலித்து, காவல் துறையின் அறிக்கையைப் பெற்று, கடவுச்சீட்டை அளிப்பதில் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தியுள்ளோம்.
     அந்த வகையில் இந்தியாவில் உள்ள 37 கடவுச்சீட்டு அலுவலகங்களில் பெங்களூரு 3-ஆம் இடத்தில் உள்ளது. இதை அங்கீகரித்து மத்திய வெளியுறவுத் துறையும் எங்களுக்கு சான்றிதழ் அளித்துள்ளது.
     பெங்களூரு மண்டல கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அலுவலக வரம்புக்குள் இயங்கிவரும் பெங்களூரு (இரண்டு மையங்கள்), ஹுப்பள்ளி, மங்களூரு கடவுச்சீட்டு சேவை மையங்கள், கலபுர்கி கடவுச்சீட்டு விண்ணப்ப பரிசீலனை அலுவலகத்தில் கடவுச்சீட்டு கேட்டு விண்ணப்பித்துவிட்டு, நேர்காணலுக்கான நேரம் பெறுவதற்கான கால அளவு ஒருநாளாக குறைந்துள்ளது.
     கடந்த ஆண்டு வரை 12 நாள்களாக இருந்த கால அளவு தற்போது ஒருநாளாக குறைந்துள்ளது பெரும் சாதனையாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் சேவை மையங்களில் நேர்காணலுக்காகக் காத்திருக்கும் நேரமும் 2 மணி நேரத்தில் இருந்து 45 நிமிடங்களாக குறைந்துள்ளது.
     மேலும் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சரிபார்த்து காவல் துறை அறிக்கை அளிப்பதற்கான காலக்கெடுவும் 45 நாள்களில் இருந்து 25 நாள்களாக குறைந்துள்ளது. நிகழ் ஆண்டில் ஜன.1 முதல் அக்.14-ஆம் தேதிவரை கர்நாடகம் முழுவதும் 5 லட்சம் கடவுச்சீட்டுகளை விநியோகித்திருக்கிறோம்.
     இது கடந்தாண்டில் 6.18 லட்சமாக இருந்தது. நிகழாண்டில் ஜன.1 முதல் அக்.14-ஆம் தேதி வரை எங்கள் அலுவலகம் ரூ.84 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 2010-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த 50 ஆயிரம் விண்ணப்பங்கள் மீதும் நடவடிக்கை எடுத்து கடவுச்சீட்டு அளித்துள்ளோம்.
     கடவுச்சீட்டு சேவையை இரண்டாம், மூன்றாம்நிலை நகரங்களுக்கு கொண்டுசெல்ல நிகழாண்டில் 16 கடவுச்சீட்டு முகாம்களை நடத்தியுள்ளோம். கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு ஆதார், வாக்காளர், பான் அட்டைகள் போதுமானதாக அறிவித்ததால், கடவுச்சீட்டு வழங்கும் நேரம் கணிசமாக குறைந்துள்ளது.
     எனினும், கடவுச்சீட்டு வழங்கும் நேரத்தை மேலும் குறைக்க காவல்துறை சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படும் காலக்கெடுவை குறைப்பது அவசியமாகும். அதற்காக இந்தியாவில் முதல் முறையாக எம்பாஸ்போர்ட் போலீஸ் என்ற செல்லிடப்பேசி செயலியை பெங்களூரு மண்டல அலுவலகத்தில் அறிமுகம் செய்துள்ளோம்.
     கர்நாடகத்தில் முதல்கட்டமாக இந்தத் திட்டம் பெங்களூருவில் உள்ள 107 காவல் நிலையங்களிலும் ஆக.1-ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளோம். இதன்காரணமாக காவல்துறை சரிபார்ப்பு, அறிக்கை அளித்தலுக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ள 21 நாள்களில் இருந்து 13 நாள்களாகக் குறைந்துள்ளது. அடுத்த மாதத்தில் இது 6-7 நாள்களாக குறையும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு விண்ணப்பித்த 10-ஆவது நாளில் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.
     இதுதவிர, வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் ஆவணங்களை சான்றொப்பம் அளிக்கும் பொறுப்பும் பெங்களூரு கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு தரப்பட்டுள்ளது. இதற்காக 4 தனியார் முகமைகளை நியமித்திருக்கிறோம். இந்த நிறுவனத்தில் சான்றிதழ்கள், ஆவணங்களை அளித்தால் அதற்கான சான்றொப்பங்களை 2 நாள்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
     கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வது எளிமையாக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தனியார் முகமைகளை நாடி செல்ல வேண்டியதில்லை. கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவங்கள் சேவை மையங்களை அணுகி கணினியில் படிவங்களை நிரப்பலாம்.
     அதன்பிறகு, நேர்காணலுக்கு நேரத்தை இணையதளம் மூலம்பெற்று, ஒரேநாளில் நேர்காணலை முடித்துக் கொண்டு, 10-15 நாள்களில் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம். எனவே, தனியார் முகவர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
     பேட்டியின் போது, பெங்களூரு மண்டல கடவுச்சீட்டு துணை அதிகாரி செüத்ரி உடனிருந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai