Enable Javscript for better performance
மகதாயி நதிநீர்ப் பிரச்னை:  அரசுக்கு மஜத யோசனை- Dinamani

சுடச்சுட

    

    மகதாயி நதிநீர்ப் பங்கீடு பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள கோவா மாநிலத்தின் சம்மதத்தை பெற முயற்சிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு மஜத மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி யோசனை தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்து கொப்பளில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
     மகதாயி நதிநீர்ப் பங்கீடு பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முற்படுமாறு மகதாயி நடுவர் மன்றம் அறிவுறுத்தியதன் பேரில், மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திரஃபட்னாவிஸ் 3 மாநில முதல்வர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
     இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கலந்து கொள்வது ஒருபக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும், இப்பிரச்னைக்குத் தீர்வுகாண கோவா மாநிலத்தை சம்மதிக்க வைக்க முயற்சிக்க வேண்டும்.
     மகதாயி நதியில் இருந்து கர்நாடகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிராக முடிவெடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு கோவா மாநில முதல்வர் லட்சுமண்பர்சேகர் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
     மகதாயி நதிநீரை பங்கிட்டுக் கொள்வது மகாராஷ்டிர மாநிலத்தைக் காட்டிலும் கர்நாடகம் மற்றும் கோவா மாநிலங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மகதாயி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தனக்கு சாதகமாக அமையும் என்பதால், கர்நாடகத்தின் குடிநீருக்காக 7.56 டிஎம்சி தண்ணீரை வழங்க கோவா மாநிலம் விரும்பவில்லை.
     இதனால்தான் பிரச்னைக்குத் தீர்வு எட்டப்படவில்லை. முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள பாஜக தலைவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. அதற்கு மஜதவின் எதிர்ப்பு கிடையாது. ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் தலையீட்டை பாஜக உறுதிசெய்து, பிரச்னையைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
     2018-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மஜத முக்கியப் பங்காற்றும். நவ.1-ஆம் தேதி முதல் மஜத மறுமலர்ச்சி இயக்கத்தைத் தொடங்கவிருக்கிறோம். காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்திருப்பதால், வட கர்நாடகத்தில் மஜதவை பலப்படுத்துவோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai