விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதியாக அவர்களது வங்கி கணக்கில் ரூ. 1,520 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் காகோடு திம்மப்பா தெரிவித்தார்.
கர்நாடக சட்ட மேலவையில் புதன்கிழமை மஜத உறுப்பினர் டி.ஏ.சரவணாவின் கேள்விக்கு அவர் அளித்த பதில்:
மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு ரூ. 1685 கோடி வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட்டது. அதில் ரூ. 1520 கோடியை வறட்சியால் பாதிக்கப்பட்ட 22,99,737 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இன்னும் 70 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ. 155 கோடி நிவாரண நிதியை வழங்க வேண்டியுள்ளது. ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்காததால், நிவாரண நிதியை முழுமையாக செலுத்த முடியவில்லை. ஆதார் எண்ணை இணைத்த ஒரு சிலருக்கு சோதனை முயற்சியாக ரூ. 1 செலுத்தப்பட்டது. ஆனால், அதனை எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்கி, விவசாயிகளுக்கு ஏற்பட்ட அவமானம் எனக் கூறி வருகின்றனர். எனவே, ஆதார் எண் இணைக்கப்பட்டவுடன் ரூ. 155 கோடியை 70 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைக்க வருவாய்த் துறை அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
பாஜக உறுப்பினர் வி.சோமண்ணாவின் கேள்விக்கு அவர் அளித்த பதில்: மாநிலத்தில் வறட்சி நிலவுவதால் மாட்டு தொழுவங்களை அமைத்து தீவனங்களை அளித்து வருகிறோம். அதில் ஊழல் நடத்துள்ளதாக உறுப்பினர் தெரிவித்துள்ளார். கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவதில் ஊழல் நடைபெறவில்லை. ஒருவேளை ஊழல் நடந்திருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன்.
கர்நாடகத்தில் 45 டன் தீவனம் இருப்பில் உள்ளது. தேவைப்பட்ட பகுதிகளுக்கு தீவனங்களை வழங்க தயாராக உள்ளோம். தேவை உள்ள இடங்களில் மட்டும் மாட்டு தொழுவங்களை திறக்க வேண்டும். இல்லை என்றால் தீவன வங்கிகளை திறக்க முன்வர வேண்டும். தீவன வங்கிகள் ரூ. 2 என்ற விலையில் தீவனங்கள் வழங்கப்படும்.
மாநிலத்தில் தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து புல் உள்ளிட்ட தீவனங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.