

பாஜகவினரின் மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு பயணம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பாவின் தலைமையில் இன்று தொடங்குகிறது.
அண்மையில் நடைபெற்ற நஞ்சன்கூடு, குண்டல்பேட் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது.
இதனிடையே, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா மற்றும் மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா இடையே கருத்துவேறுபாடு எழுந்ததால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் கட்சியின் செல்வாக்கு சரிந்துவருவதை உணர்ந்த பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, வறட்சிநிலை மற்றும் வறட்சி நிவாரணப் பணிகளை ஆய்வு செய்யும் நோக்கில் மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு பயணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
தும்கூரில் உள்ள சித்தகங்கா மடத்தில் 110 வயது சிவக்குமாரக்குமார சுவாமிகளிடம் ஆசி பெற்று மக்கள் சந்திப்புப் பயணத்தை பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தொடங்குகிறார். இந்த பயணத்தில் மத்திய அமைச்சர்கள் அனந்த்குமார், சதானந்த கெüடா, பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ்ஷெட்டர், மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோரிடையே கட்சியைப் பலப்படுத்த திட்டமிட்டுள்ள பாஜகவினர், தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளில் பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கும் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
36 நாள்களுக்கு தொடரவிருக்கும் மக்கள் சந்திப்புப் பயணத்தை வழிநடத்தவிருக்கும் எடியூரப்பா, அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து தகுதியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கவும் கருத்துக்கணிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்.
மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பயணிக்கத் திட்டமிட்டுள்ள எடியூரப்பா, வறட்சி நிவாரணப் பணிகளையும் ஆய்வு செய்யவிருக்கிறார். மக்கள் சந்திப்புப் பயணத்தின் மூலம் கட்சியில் குழப்பம் இருப்பதாகக் கூறப்படுவதை பொய்யாக்கவும் எடியூரப்பா திட்டமிட்டிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.