கைத்தறி மற்றும் ஜவுளித் தொழில்நுட்ப பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கர்நாடக கைத்தறி தொழில்நுட்ப மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கர்நாடக கைத்தறி தொழில்நுட்ப மையத்தில் 3 ஆண்டுகள் படிக்க வேண்டிய கைத்தறி மற்றும் ஜவுளித் தொழில்நுட்ப பட்டயப் படிப்புக்கு (டிப்ளமோ) 2017-18-ஆம் கல்வியாண்டில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆங்கிலப் பாடத்துடன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் தகுதி அடிப்படையில் மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படும். சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு தங்கும் வசதியுடன் மாத கல்வி உதவித்தொகையாக ரூ.1200 வழங்கப்படும்.
2017, ஜூலை 1-ஆம் தேதி அன்று 15 முதல் 23 வயது நிரம்பியுள்ள பொதுப்பிரிவினர், 15 முதல் 25 வயது நிரம்பியுள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்.
42 மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்கப்படும்.
இந்த மாணவர்களில் கர்நாடக கைத்தறி தொழில்நுட்ப மையத்திற்கு(கதக்மற்றும் பேட்டகேரி) 22, தமிழகத்தின் சேலத்தில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப மையத்தில் 15, ஆந்திரத்தில் வெங்கடகிரியில் உள்ள எஸ்.பி.கே.எம்.இந்திய கைத்தறி தொழில்நுட்ப மையத்தில் 3 , கேரளமாநிலத்தில் கன்னூரில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப மையத்தில் 2 மாணவர்கள் என்று பிரித்து அனுப்பப்படுவார்கள்.
தகுதியான மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பங்களை கதக்கில் உள்ள கர்நாடக கைத்தறி தொழில்நுட்ப மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 080-23564828, 23568233, 23563903,08372-297221 ஆகியதொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பங்களை ஜூன் 10-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முதலாமாண்டு பியூ கல்லூரி மாணவர் சேர்க்கை: கால அட்டவணை வெளியீடு
பெங்களூரு, மே 17: முதலாமாண்டு பியூ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணையை பியூ கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பியூ கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநிலத்தில் உள்ள பியூ கல்லூரிகளில் முதலாமாண்டு பியூ வகுப்பில் சேர மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். 2017-18-ஆம் ஆண்டுக்கான முதலாமாண்டு பியூ வகுப்புகள் ஜூன் 9-ஆம் தேதி மற்றும் 2-ஆம் ஆண்டு பியூ வகுப்புகள் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி, 2018, மார்ச் 31-ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது.
கல்வியாண்டின் இடையில் அக்.8 முதல் அக்.22-ஆம் தேதிவரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது. முதலாமாண்டு பியூ வகுப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க அதற்கான படிவங்களை ஜ்ஜ்ஜ்.ல்ன்ங்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
முதலாமாண்டு பியூ வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 20-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். நிறைவு செய்த விண்ணப்பங்களை மே 23-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
முதலாமாண்டு பியூசி மாணவர் சேர்க்கை ஜூன் 12, இரண்டாமாண்டு பியூசி மாணவர் சேர்க்கை ஜூன் 15-ஆம் தேதியுடன் நிறைவுபெறும். முதலாண்டு பியூசி சேர்க்கைக்கு ஜூன் 14 முதல் 23-ஆம் தேதி வரை அபராதமாக ரூ.504 செலுத்தி மாணவர் சேர்க்கை பெறலாம்.
ஜூன் 24 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை கூடுதல் அபராதமாக ரூ.504 செலுத்தி மாணவர் சேர்க்கை பெறலாம். இரண்டாமாண்டு பியூசி சேர்க்கைக்கு ஜூன் 16 முதல் 21-ஆம் தேதி வரை அபராதமாக ரூ.504 செலுத்தி மாணவர் சேர்க்கை பெறலாம்.
எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட 7 நாள்களுக்குள் அபராதம் எதுவும் செலுத்தாமல் மாணவர் சேர்க்கை பெறலாம். துணைத் தேர்வில் மறு மதிப்பீடு செய்தபிறகு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட 15 நாள்களுக்குள் அபராதம் செலுத்தாமல் மாணவர் சேர்க்கை செய்து கொள்ளலாம். முதலாமாண்டு பியூ வகுப்புகள் ஜூன் 9-ஆம் தேதிமுதல் தொடங்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கோவை- பெங்களூரு கோடை ரயில் ரத்து
பெங்களூரு,மே 17: கோவை- பெங்களூரு இடையே இயக்கப்படவிருந்த கோடை கால சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோடைகால நெரிசலைக் குறைக்க மே 17 முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை கோவை மற்றும் பெங்களூரு (கிருஷ்ணராஜபுரம்) இடையே இயக்கத் திட்டமிட்டிருந்த ரயில் (06059,06060) ரயில் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலுக்கு போதுமான பயணிகள் முன்பதிவு இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணிடம் நகை பறிப்பு
பெங்களூரு, மே 17: பெங்களூரு காவேரி நகரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 26 கிராம் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை இரவு பறித்துச் சென்றனர்.
காவேரிநகர் பைப்லைன் சாலையைச் சேர்ந்த விஜயலட்சுமி (32). தனது வீட்டின் கதவுகளை திறந்துவைத்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் விஜயலட்சுமி அணிந்திருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 26 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து பசவேஸ்வரநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.