கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக பியூ கல்லூரிகளின் விடுமுறை நாள்களை பியூ கல்வித் துறை அதிரடியாக குறைத்துள்ளது.
2017-18-ஆம் கல்வியாண்டுக்கான வேலை திட்டம் மற்றும் வழிகாட்டுதல் கையேட்டை வெளியிட்ட பியூ கல்வித் துறை, வழக்கமாக உள்ள விடுமுறை நாள்களை கணிசமாக குறைத்துள்ளது.
நிகழ் கல்வியாண்டில் தசரா மற்றும் கோடை விடுமுறை நாள்களை குறைத்துள்ளதோடு, அந்த நாள்களை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தசரா திருவிழா விடுமுறை நாள்களில் 5 நாள்கள் குறைக்கப்பட்டுள்ளன. 90 நாள்கள் கோடை விடுமுறைகளில் 15 நாள்கள் குறைக்கப்பட்டுள்ளன. கோடை காலத்தில் முதலாமாண்டு பியூ மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கவும் பியூ கல்வித் துறை தீர்மானித்துள்ளது.
இதேபோல, முதலாமாண்டு பியூசி வகுப்பையும் வழக்கத்தைவிட 5 நாள்கள் முன்னதாக தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விடுமுறைகளைக் குறைப்பதன் மூலம் கல்வித் தரத்தை மேம்படுத்த பியூ கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பியூ கல்வித் துறை இயக்குநர் சி.ஷிகா கூறுகையில், முதலாமாண்டு பியூசி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாள்களைக் குறைத்திருப்பதன் மூலம் இரண்டாமாண்டு பியூசி பயிற்சி வகுப்புகள் முன்கூட்டியே தொடங்கப்படும். இதனால் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இரண்டாமாண்டு பியூசி வகுப்பை எதிர்கொள்ள இயலும். கோடையில் விடைகளை எழுதி பயிற்சி எடுப்பதற்காக வினாக்களும் வழங்கப்படும்.
தனிப் பயிற்சி வகுப்புகளை (டியூஷன்) நாடுவதற்கு பதிலாக வீட்டில் இருந்தபடியே படிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
கோடையில் ஏதாவதொரு தனிப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிப்பதை மாணவர்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
இதை இரண்டாமாண்டு பியூசி வகுப்புகளுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். ஒருசில கல்லூரிகள் தனிப்பயிற்சி வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கல்லூரி வளாகத்திலே வகுப்புகளை நடத்துகிறார்கள்.
மேலும் மதிப்பெண்களை பெற்றுத் தருகிறோம் என்று ஆசை வாக்குறுதிகளை கூறி மாணவர்களை ஏமாற்றும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இது சட்ட விதிமீறலாகும். இதுபோல செயல்படும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விதிகளில் கூறியுள்ள கல்லூரிகள் செயல்பட வேண்டும். இதை மீறி செயல்பட்டால் பியூ கல்வித் துறையின் நடவடிக்கைகளைத் தவிர்க்கமுடியாத நிலை ஏற்படும் என்றார்.
2017-18-ஆம் கல்வியாண்டில் தசரா திருவிழாவுக்காக அக்.8 முதல் 22-ஆம் தேதிவரையும், கோடை காலத்திற்காக ஏப்.1 முதல் மே 27-ஆம் தேதி வரையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.