பாஜகவினரின் தூண்டுதலின் பேரிலே என்மீது சுரங்க முறைகேடு வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச் சார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவருமான குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கர்நாடக மாநிலம், ராய்ச்சூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கடந்த 4 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளன. அதை வெளியே கொண்டுவர மஜத முயற்சி செய்து வருகிறது. ஆளும் கட்சியின் தோல்வியால், மஜதவுக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது.
இதனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மஜதவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற அச்சத்தால் தன்மீது ஜந்தகல் சுரங்க முறைகேடு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜகவின் தூண்டுதலே காரணம்.
என்னைக் கைது செய்யும் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் ஏற்கெனவே 3 முறை முன்ஜாமீன் பெற்றுள்ளேன். தற்போது 4-வது முறையாக முன்ஜாமீன் பெற்றுள்ளேன். ஒரே வழக்கில் 4 முறை முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜந்தகல் சுரங்க முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிகாரி கங்காராம் படேரியாவுக்கும், எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஆனால், அவருடன் எனக்கு நீண்ட தொடர்புடையது போல சித்தரிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
இதனிடையே, பெங்களூரு லோக் ஆயுக்த நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை குமாரசாமி முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். புதன்கிழமை இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மே 23-ஆம் தேதி வரை அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
உத்தரவில் சுரங்க முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வுப் படையினர் விசாரணைக்கு அழைத்தால், அதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.