மலபிரபா கால்வாய் கட்டுமானப் பணியில் ஊழல்? சித்தராமையா மீது எடியூரப்பா குற்றச்சாட்டு

மலபிரபா, கட்டபிரபா நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இருந்து செல்லும் கால்வாய்களைச் சீரமைக்கும் கட்டுமானப் பணிக்கான
Published on
Updated on
2 min read

மலபிரபா, கட்டபிரபா நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இருந்து செல்லும் கால்வாய்களைச் சீரமைக்கும் கட்டுமானப் பணிக்கான நிதியில் முதல்வர் சித்தராமையா, நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஊழல் செய்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா குற்றம்சாட்டினார்.
 இதுகுறித்து ஹாவேரியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மலபிரபா, கட்டபிரபா நதிகளின் குறுக்கே அமைந்துள்ள அணைகளில் இருந்து விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல கட்டப்பட்டுள்ள இடதுபுறக்கால்வாய் மற்றும் வலதுபுறக் கால்வாய்களைச் சீரமைக்கும் கட்டுமானப் பணி அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 இந்த பணிக்கு ரூ.400 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. திட்டச்செலவை ரூ.1000 கோடிக்கு உயர்த்தி மதிப்பிடும்படி கண்காணிப்பு பொறியாளரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு அந்த அதிகாரி இணங்க மறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, 24 மணி நேரத்தில் அந்த அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 அல்மாட்டி அணையில் இருப்பு நீராக சேமித்து வைக்கப்பட்டிருந்த 7 டிஎம்சி தண்ணீரை சட்டவிரோதமாக ஜிந்தால் நிறுவனத்திற்கு அமைச்சர் எம்.பி.பாட்டீல் விற்றுள்ளார். கர்நாடக மாநிலம் கடுமையான வறட்சி எதிர்கொண்டுள்ள நிலையில், மக்கள் குடிநீருக்கு தவித்துவரும் நிலையில் அணையில் சேமித்து வைத்திருந்த தண்ணீரை தனியார் நிறுவனத்திற்கு விற்றது சட்ட விரோதமானதாகும்.
 இந்த விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க முன்னாள் அமைச்சர்கள் பசவராஜ்பொம்மை, கோவிந்த்கார்ஜோள், எம்.பி. பிரஹலாத்ஜோஷி ஆகியோர் கொண்டகுழு அமைக்கப்பட்டுள்ளது.
 மே 30,31-ஆம் தேதிகளில் அல்மாட்டி அணைக்கு இக்குழு பயணம் செய்து, ஜிந்தால் நிறுவனத்திற்கு தண்ணீரை விற்றுள்ளதால் ஏற்பட்டுள்ள இழப்பை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும். இந்த அறிக்கை கிடைத்ததும் பாஜக போராட்டம் நடத்தும் என்றார்.
 
 "எடியூரப்பாவின் குற்றச்சாட்டில் உண்மையில்லை'
 பெங்களூரு, மே 24: மலபிரபா கால்வாயை நவீனமாக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளியே இன்னும் கோராத நிலையில், அதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறுவதில் உண்மையில்லை என்றார் கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல்.
 பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 மலபிரபா கால்வாயை நவீனமாக்கும் திட்டத்தில் அரசு முறைகேடு செய்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா குற்றஞ்சாட்டி வருவதில் உண்மையில்லை.
 மலபிரபா கால்வாயை நவீனமாக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது என்னவோ உண்மை. ஆனால், அதற்கான ஒப்பந்தப் புள்ளியை இன்னும் கோரவில்லை. ஒப்பந்தப் புள்ளியைக் கோருவதற்கு முன்னதாக கர்நாடக நீர் வளக் கழகத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது எடியூரப்பாவுக்குத் தெரியும்.
 கர்நாடக நீர்வளக் கழத்தின் ஒப்புதல் பெறாத நிலையில், ஒப்பந்தப் புள்ளி கோருவது எப்படி? எடியூரப்பா இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவது சரியல்ல. மலபிரபா கால்வாய் நவீனமாக்கும் திட்டத்துக்கு ரூ. 400 கோடி செலவு செய்யத் திட்டமிடப்பட்டது.
 ஆனால், இதை பல ஆயிரம் கோடியாக உயர்த்தியுள்ளதாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. மகதாயி நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தோல்வி அடைந்த பாஜக மீது வட கர்நாடக மக்கள் கோபத்தில் உள்ளனர். அவர்களைச் சமாதானபடுத்துவதற்காக எடியூரப்பா தேவையில்லாத குற்றச்சாட்டுகளை ஆளும் கட்சி மீது சுமத்தி வருகிறார்.
 மேலும், காங்கிரஸ்க் கட்சியினரை குறிவைத்து வருமான வரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். வருமான வரித் துறையினர் எப்போது வேண்டுமானாலும் என்னை சோதனை செய்யலாம், அதை வரவேற்கிறேன் என்றார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com