4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது லோக் ஆயுக்தவில் புகார்

தன்மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக பணியின் போது பழிவாங்கப்படுவதாக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது லோக் ஆயுக்தவில் கர்நாடக ஆட்சிப் பணி அதிகாரி புகார் தெரிவித்தார்.
Published on
Updated on
1 min read

தன்மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக பணியின் போது பழிவாங்கப்படுவதாக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது லோக் ஆயுக்தவில் கர்நாடக ஆட்சிப் பணி அதிகாரி புகார் தெரிவித்தார்.
 கர்நாடக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளாக பணியாற்றிவரும் ரமணரெட்டி, கல்பனா, டி.கே.அனில்குமார், லட்சுமிநாராயணா ஆகியோர் மீது அரசு நிர்வாகம் மற்றும் ஊழியர் சீர்த்திருத்தத் துறையின் கூடுதல் செயலாளரும், கேஏஎஸ் (கர்நாடக ஆட்சிப் பணி)அதிகாரியுடமான கே.மதாயி, பெங்களூரில் புதன்கிழமை லோக் ஆயுக்த நீதிபதி பி.விஷ்வநாத் ஷெட்டியிடம் புகார் அளித்தார்.
 இதுகுறித்து செய்தியாளர்களிடம் கே.மதாயி கூறியது:
 பெங்களூரு மாநகராட்சியில் நான் பணியாற்றிய போது ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான விளம்பர முறைகேடு குறித்து மாநில அரசிடம் அறிக்கை அளித்திருந்தேன். அதன்பிறகு சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் என்னை துன்புறுத்தத் தொடங்கினர்.
 எனது அறிக்கையை மாநில அரசு ஏற்றுக்கொண்டதோடு, அதை சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் முறைகேட்டை கண்டுபிடித்ததற்காக என்னை அரசு பாராட்டியது.
 இதனால், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் எனது பணி திருப்திகரமாக இல்லை என்று குறிப்பு எழுதி எனது பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வைத் தடுத்து வருகிறார்கள். மாநகராட்சியில் இருந்து அரசு சேவைகள் உறுதி திட்டத் துறைக்கு மாற்றப்பட்ட பிறகும் என்னை துன்புறுத்தும் போக்கு தொடர்ந்தது.
 கூடுதல் தலைமைச் செயலாளர் கல்பனா, எனக்கு தினமும் நோட்டீஸ் அளித்து, குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதுபோன்ற துன்புறுத்தல்களை விளக்கி, லோக் ஆயுக்த நீதிபதி பி.விஷ்வநாத் ஷெட்டியிடம் புகார் அளித்துள்ளேன்.
 அச்சமில்லாமல் வேலை செய்யும் போக்கு அலுவலகத்தில் இல்லை. அலுவலகத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால் அதற்கு என்னை பலிகடா ஆக்கிவருகிறார்கள். நான்கு மாதங்களில் 6 முறை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். இதனால் பல அரசு அதிகாரிகள் தற்கொலை முடிவை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 என்னை போன்ற அரசு அதிகாரிகளின் குறைகளைக் கேட்டு களைவதற்கு யாரும் இல்லாததால், லோக் ஆயுக்தவை அணுகி புகார் அளிக்க வேண்டியநிலை வந்தது. முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்து குறைகளைத் தெரிவிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தடைக்கல்லாக இருந்து வருகிறார்கள்.
 எனது புகாரைப் பெற்றுக் கொண்ட லோக் ஆயுக்த நீதிபதி விஷ்வநாத் ஷெட்டி, சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார். அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்றார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com