Enable Javscript for better performance
அடுத்த மாதத்தில் 3 நாள்கள் கர்நாடகத்தில் ராகுல் காந்தி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    அடுத்த மாதத்தில் 3 நாள்கள் கர்நாடகத்தில் ராகுல் காந்தி முகாம்

    By DIN  |   Published on : 22nd October 2017 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அடுத்த மாதத்தில் 3 நாள்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டிருக்கிறார்.
    கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற இருப்பதால், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் நவம்பர் மாதத்தில் 3 நாள்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திட்டம் வகுத்திருக்கிறார்.
    நவ.19-ஆம் தேதி கர்நாடகத்துக்கு வரும் ராகுல் காந்தி, அன்று சிக்மகளூருவில் நடைபெறும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்கிறார். நவ.20-ஆம் தேதி கடூர், பீரூரில் நடைபெறும் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்கிறார். அன்று மாலை 4 மணி அளவில் சிவமொக்காவில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுகிறார்.
    சுற்றுப் பயணத்தின் கடைசி நாளான நவ.21-ஆம் தேதி வட கன்னட மாவட்டத்தின் கும்டாவில் நடைபெறும் மீனவர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகிறார்.
    முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மலைநாடு மற்றும் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னணியினர் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பங்கேற்று ராகுல்காந்தி ஆலோசனை நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    இதுதவிர, முதல்வர் சித்தராமையாவும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட திட்டம் வகுத்திருக்கிறார். வெகுவிரைவில் கர்நாடகத்தின் தென்கோடி மாவட்டமான சாமராஜ்நகரில் தனது பிரசாரத்தை தொடங்கி, 224 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்து, பீதர் மாவட்டத்தில் தனது பிரசாரத்தை நிறைவுசெய்கிறார்.
    ஒரு மாத காலம் செல்லவிருக்கும் இந்த பயணத்தில் ஆங்காங்கே நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். இதற்கு முன், மாவட்டவாரியான மாநாடுகளை நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதிலும் முதல்வர் சித்தராமையா கலந்துகொள்ள முடிவுசெய்திருக்கிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai