Enable Javscript for better performance
நிலக்கரி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: எடியூரப்பா- Dinamani

சுடச்சுட

    

    நிலக்கரி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: எடியூரப்பா

    By DIN  |   Published on : 22nd October 2017 04:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிலக்கரி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கர்நாடக பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.

    இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  கர்நாடகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கர்நாடக மின்சாரக் கழகம் (கேபிசிஎல்) முதல்வர் சித்தராமையா தலைமையில் இயங்கி வருகிறது.  மேலும் மின்துறையை டி.கே.சிவக்குமார் நிர்வகித்து வருகிறார்.
    இந் நிலையில், கர்நாடக மின்சாரக் கழகத்துக்கு மத்திய அரசிடம் இருந்து நிலக்கரி தொகுதிகளை வழங்குவதற்காக எம்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது.  இந்நிறுவனத்தின் தவறு காரணமாக,  அபராதம் செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    ஆனால்,  இந்த நிறுவனம் செலுத்தவேண்டிய அபராதத் தொகையான ரூ.447 கோடியை மத்திய அரசுக்கு கர்நாடக மின்சாரக் கழகம் செலுத்தியுள்ளது.  இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளது.  தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக முதல்வர் சித்தராமையா,  மின்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் நடந்துகொண்டுள்ளனர்.  இதில் ஊழல் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
    எனவே,  இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசுக்கு பாஜக கடிதம் எழுதும்.
    உச்ச நீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அபராதத் தொகையை தனியார் நிறுவனம் தான் மத்திய அரசுக்குச் செலுத்தியிருக்க வேண்டும்.  ஆனால்,  தனியார் நிறுவனத்தின் சார்பில் அபராதத் தொகையை கர்நாடக மின்சாரக் கழகம் செலுத்த வேண்டிய அவசியமென்ன?
    11 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ள முதல்வர் சித்தராமையாவுக்கு இதுக்கூடத் தெரியாதா?  சட்டத்துக்கு எதிராக அபராதத் தொகையை கர்நாடக மின்சாரக் கழகம் செலுத்தியுள்ளது.  தனியார் நிறுவனத்தில் கர்நாடக மின்சாரக் கழகத்தின் பங்கு வெறும் 26 சதவீதம் தான்.  இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகைக்கு கர்நாடக மின்சாரக் கழகம் எப்படி பொறுப்பாக முடியும்?   24 மணி நேரத்தில் அவசர கதியில் அபராதம் செலுத்தியதேன்? தனியார் நிறுவனத்துடன் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தம் என்ன?  என்பதை வெளியே கொண்டுவர இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai