பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கு தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது

பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கு தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கு தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்மொழி, இலக்கிய, பண்பாட்டு மேன்மைகளை குறிக்கோளாகக் கொண்டு சென்னையைச் சேர்ந்த எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப் பேராயத்தின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகள், தமிழ் இதழ்கள், தமிழ்ச்சங்கங்கள், தமிழறிஞர்களுக்கு பன்னிரண்டு வகையான விருதுகளை வழங்கி வருகிறது. 
அதற்கான விழா சென்னையில் புதன்கிழமை நடந்தது. தமிழ்ப் பேராயத்தின் புரவலர் தா.இரா.பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அயல் மாநிலப் பிரிவிற்கான தொல்காப்பிய தமிழ்ச் சங்க விருது பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரனிடம் தா.இரா.பாரிவேந்தர் வழங்கினார். விருதுடன் பட்டயம், ரூ.50ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. 
விழாவில் எஸ்ஆர்எம் கல்விக்குழுமத்தின் தலைவர் இரவி பச்சமுத்து, துணைத் தலைவர் இரா.சிவக்குமார், தமிழ்ப் பேராயத்தின் தலைவர் தி.பொ.கணேசன், வி.ஜி.சந்தோசம்,மேற்குவங்க அரசின் மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர் கோ.பாலச்சந்திரன், பெங்களூரு தமிழ்ச்சங்க துணைச்செயலாளர்கள் அமுதபாண்டியன், எஸ்.சுந்தரவேலு, மு.சம்பத் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
விருதுடன் வழங்கப்பட்ட பட்டயத்தில், "அயல் மாநிலத்தமிழர் நலனுக்காகவும், அருந்தமிழ் வளர்ச்சிக்காகவும் அரும்பணி ஆற்றிவரும் தமிழ்ச்சங்கங்களில் சிறப்பாகக்குறிப்பிடத்தக்க சாதானிகளைப் படைத்த பெருமைக்குரியது பெங்களூரு தமிழ்ச்சங்கம். கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழக்கலை, பண்பாடு ஆகியவற்றை வளர்த்தல், தமிழர்-கன்னடர் உறவுகளை மேம்படுத்தல் ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டு கர்நாடகத் தமிழர் நலனை பேணி மாபெரும் இயக்கமாக இச்சங்கம் செயல்பட்டுவருகிறது. அனைவரும் பயன்பெறும் வகையில் இசை, நாட்டிய, கருவியிசை, யோகம், கராத்தே போன்ற உடற்பயிற்சி வகுப்புகளைத் தொடர்ந்து நடத்திவரும் இச்சங்கம் தமிழைப் பயிற்று மொழியகக் கொண்டு பெங்களுரு தமிழ்ச்சங்க காமராசர் உயர்நிலைப் பள்ளியை நடத்துவதோடு, "ஊற்று' என்ற திங்கள் இதழையும் சிறப்பாக நடத்திவருகிறது. 
நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை கொண்ட நூலகத்தை நடத்திவரும் இச்சங்கம் தமிழ்மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் தொண்டாற்றிய சான்றோர்களைப் போற்றிடும் வகையில் 30-க்கும் மேற்பட்ட அறக்கட்டளைகளையும் நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் அறக்கட்டளைச்சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், மாநாடுகள், கலைநிகழ்ச்சிகள் எனத் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றும் சிறப்பு இச்சங்கத்திற்கு உண்டு. திங்கள்தோறும் ஏரிக்கரைப்பாட்டரங்கம் மற்றும் வாசகர் வட்டம் நிகழ்ச்சிகளை நடத்தி எண்ணற்ற கவிஞர்களையும் பேச்சாளர்களையும் உருவாக்கிய பெருமை இச்சங்கத்திற்கு உண்டு. 
பல்லாண்டுகளாக திறக்கப்படமல் இருந்த திருவள்ளுவர் சிலையைக் கர்நாடக அரசு, தமிழக அரசு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அல்சூர் எரியின் எதிரில் திறந்துவைத்த சிறப்பு இதற்கு உண்டு. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றை கன்னடமொழியில் மொழிபெயர்க்கும் வாய்ப்பை இச்சங்கத்திற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இலக்கிய வகுப்புகளை சிறப்புமிக்க பேராசிரியர்களை கொண்டு வாரந்தோறும் நடத்திவரும் இச்சங்கம், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தோடு இணைந்து 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பன்னாட்டுக் கருத்தரங்கை பலரும் பாராட்டும் வண்ணம் நடத்திய சிறப்பிற்கும் உரியது. சிறப்புமிக்க பெங்களூரு தமிழ்ச் சங்கத்திற்கு ரூ.50 ஆயிரம் விருது தொகையுடைய 2017-ஆம் ஆண்டிற்கான தொல்காப்பியர் தமிழ்ச்சங்கவிருது வழங்கிப் பாராட்டுவதில் திரு.இராமசாமி நினைவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தமிழ்ப்பேராயம் பேருவகை கொள்கிறது' என
குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com