Enable Javscript for better performance
கர்நாடக சட்டப்பேரவையில் குறைந்த எண்ணிக்கையில் ஆஜரான அமைச்சர்கள்: எதிர்க்கட்சிகள் ஆட்சேபம்- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக சட்டப்பேரவையில் குறைந்த எண்ணிக்கையில் ஆஜரான அமைச்சர்கள்: எதிர்க்கட்சிகள் ஆட்சேபம்

    By DIN  |   Published on : 09th February 2018 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக சட்டப்பேரவையில் குறைந்த எண்ணிக்கையில் அமைச்சர்கள் ஆஜரானதற்கு எதிர்க்கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்தனர்.
    பேரவையில் வியாழக்கிழமை குறைந்த எண்ணிக்கையில் அமைச்சர்கள் ஆஜராகினர். இதற்கு பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்தனர். கேள்வி நேரத்தில் இதுகுறித்து பாஜக உறுப்பினர் லட்சுமண் சவதி பேசியது:
    ஆளுநர் உரை மீதான விவாதம் கடந்த 4 நாள்களாக நடைபெற்று வருகிறது. ஆனால், தொடர்ந்து அவையில் குறைந்த எண்ணிக்கையில் அமைச்சர்கள் ஆஜராகி வருவது சரியல்ல. அமைச்சர்கள் அவைக்கு வராமல் எங்கு செல்கின்றனர் என்பது தெரியவில்லை.
    ஒருவேளை வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனரா என்பதனை சட்டப்பேரவைத் தலைவர் தெரிவிக்க வேண்டும். அப்படிச் சென்றிருந்தால் அவர்கள் பேரவைத் தலைவரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். அப்படி யாரேனும் உங்கள் அனுமதியைப் பெற்றுள்ளனரா என்பதனை அவைக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.
    இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியது:
    தொடர்ந்து 4 நாள்களாக அவைக்கு வருவதை அமைச்சர்கள் தவிர்த்து வருகின்றனர். அவைக்கு வராத அமைச்சர்கள் பட்டியலை பேரவைத் தலைவர் படிக்க வேண்டும். அதன்மூலம் சபைக்கு வராத அமைச்சர்களின் பெயர்களை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்றார்.
    அப்போது குறுக்கிட்ட அமைச்சர் யு.டி.காதர், மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சரண்பிரகாஷ் பாட்டீல் சொந்தக் காரணங்களுக்காக அவைக்கு வரமுடியவில்லை. வெள்ளிக்கிழமை அவர் ஆஜராவார் என்றார்.
    குறுக்கிட்டுப் பேசிய பாஜக உறுப்பினர் கோவிந்த் கார்ஜோள், 'தனது சொந்தக் காரணங்களுக்காக அமைச்சர்கள் அவைக்கு வர முடியவில்லை என்றால், பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வீட்டில் இருக்கட்டும். அமைச்சர் பதவியை நிரப்ப, காங்கிரஸ் கட்சியில் மூத்த உறுப்பினர்கள் பலர் உள்ளனர்' என்றார். மஜத உறுப்பினர்களும் இதனை வலியுறுத்தினர்
    இதற்குப் பதிலளித்துப் பேசிய அவைத் தலைவர், அமைச்சர்கள் அனுமதி பெற்று வெளியில் சென்றுள்ளனர். நாளை அவை நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai