Enable Javscript for better performance
நந்திமலையில் ரோப்கார் வசதி: அமைச்சர் பிரியங்கார்கே- Dinamani

சுடச்சுட

    

    சிக்பளாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் ரோப்கார் வசதியை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சர் பிரியங்கார்கே தெரிவித்தார்.
    சட்டப்பேரவையில் வியாழக்கிழமை பாஜக உறுப்பினர் ஒய்.ஏ.நாராயணசாமியின் கேள்விக்குப் பதிலளித்து அவர் பேசியது:
    பெங்களூருக்கு அருகே சிக்பளாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்திமலைக்குச் செல்ல ரூ.30 கோடி செலவில் சாலையை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தைச் செயல்படுத்த முதல்கட்டமாக ரூ.10கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது.
    நந்திமலைக்கு செல்ல ரோப்கார் வசதியை ஏற்படுத்தும் திட்டம் அரசிடம் உள்ளது. 2015-16-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் சித்தராமையா, நந்திமலையில் ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மலையின் அடிவாரத்தில் 9 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
    இந்த திட்டத்தைச் செயல்படுத்த ரூ.94.33 கோடியில் விரிவான திட்ட அறிக்கையை தாரஷா நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திட்டத்தை அரசு-தனியார் கூட்டு முயற்சியில் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
    அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு
    பெங்களூரு, பிப்.8: அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கர்நாடக மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் உமாஸ்ரீ தெரிவித்தார்.
    கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை காங்கிரஸ் உறுப்பினர் டாக்டர் சுதாகர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்:
    அரசு நடத்தும் அங்கன்வாடிகளில் பணியாற்றி வருவோருக்கு மாதம் ரூ.6 ஆயிரமும், உதவியாளருக்கு மாதம் ரூ.3 ஆயிரமும் மதிப்பூதியமாக வழங்கப்பட்டுவந்தது. இந்நிலையில், 2017-18-ஆம் நிதியாண்டில் அங்கன்வாடி பணியாளர்களின் மதிப்பூதியத்தை ரூ.2ஆயிரம், உதவியாளரின் மதிப்பூதியத்தை ரூ.1000 ஆகவும் உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டது. அதன்விளைவாக, ஊழியர்களின் ஊதியம் ரூ.8 ஆயிரமாகவும், உதவியாளர்களின் ஊதியம் ரூ.4 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
    சிக்பளாப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 1923 அங்கன்வாடி பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். பாகேபள்ளியில் 365, சிக்பளாப்பூரில் 299, சிந்தாமணியில் 455, கெளரிபிதனூரில் 344, குடிபண்டேயில் 123, சிட்லகட்டாவில் 337 பேர் பணிபுரிகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai