Enable Javscript for better performance
பெங்களூரில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: பாஜக- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரில் அதிகரித்துவரும் கொலை சம்பவங்களையடுத்து, சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பேரவையில் பாஜக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.அசோக் குற்றஞ்சாட்டினார்.
    கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை பூஜ்யம் நேரத்தில் பாஜக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.அசோக் பேசியது:
    பெங்களூரு மாநகராட்சி மாமன்றத்தின் பாஜக உறுப்பினர் ரேகா கதிரேஷின் கணவர் கதிரேஷ் பட்டப்பகலில் பிப்.7-ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்றைக்கு கதிரேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். நாளைக்கு யார் என்று தெரியாது என்றார்.
    அப்போது குறுக்கிட்டு பேசிய பாஜக உறுப்பினர் சி.டி.ரவி, 'நாளைக்கு யார் என்றதும் ஆளுங்கட்சித் தரப்பில் இருக்கும் ஒரு உறுப்பினர் என் பெயரை குறிப்பிடுகிறார். மரணத்தை பற்றி எனக்கு கவலையில்லை' என்றார்.
    இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், 'நாளைக்கு யார் என்றதும் சி.டி.ரவி பெயரை குறிப்பிடுகிறார்கள் என்றால், மாநில அரசின் மனநிலை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளமுடிகிறது. மாநிலத்தில் அரசின் நடவடிக்கை முழுமையாக சீர்கெட்டுள்ளது. அரசு இயந்திரம் இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது' என்றார்.
    இதனால் அவையில் காங்கிரஸ்- பாஜக உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. கூச்சல், குழப்பம் நிலவியது.தொடர்ந்து பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், 'மாநிலத்தில் குண்டர்களின் அட்டகாசம் வெளிப்படையாக நடக்கிறது' என்றார்.
    அப்போது குறுக்கிட்ட வேளாண்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகெளடா, 'சி.டி.ரவி நண்பர் என்பதால் தோழமையாக சொல்லப்பட்டதுதானே தவிர, அதற்கு உள்நோக்கம் எதுவுமில்லை. எனினும், அப்படி கூறியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
    அப்போது சி.டி.ரவி, 'எனக்கு பாதுகாப்பு கொடுங்கள். எனக்கு கொலைமிரட்டல் வந்துள்ளதால், ஏற்கெனவே மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு புகார் தெரிவித்துள்ளேன்' என்றார்.இந்தவிவகாரம் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
    இதைத் தொடர்ந்து ஆர்.அசோக் பேசியது: நாளைக்கு யார் என்றதும் சி.டி.ரவி பெயரை குறிப்பிடுவது சரியல்ல. எல்லோரும் ஒருநாள் மறிக்கவேண்டியவர்கள்தான். பாஜக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் சிலருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதால், மாநில அரசு பாதுகாப்பு அளித்துள்ளது. இது கடந்த 3 மாதங்களாக நடந்துவருகிறது. கொலை செய்யும் அளவுக்கு கர்நாடகத்தின் நிலைமாறியுள்ளது வேதனை அளிக்கிறது.
    மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்பதற்கு இதுவே சான்றாகும். பூங்காநகரம், தகவல் தொழில்நுட்பநகரம் என்பதை தாண்டி பெங்களூரு கொலை நகரமாகி வருகிறதா? அடுத்தடுத்து கொலைகள் நடந்துவந்தால் பெங்களூருவின் நற்பெயர் என்னாவது? தொழில்முதலீட்டாளர்கள் எப்படி பெங்களூருவுக்கு வருவார்கள்? தகுதியான காவல் அதிகாரிகளை பணி நியமனம் செய்ய வேண்டும். கதிரேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    தொடர்ந்து பேசிய ஜெகதீஷ்ஷெட்டர்: கதிரேஷ் கொலையை வன்மையாக கண்டிக்கிறேன். ரெளடிகள், தொழில்முறை குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். காவல் துறையினரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai