திருப்பத்தூர் சினேகா - தமிழ்நாட்டில் ‘ஜாதியற்றவர்’ எனும் அரசு சான்றிதழ் பெற்ற முதல் பெண்!

ஜாதிச் சான்றிதழ் பெறுவது போலவே ஜாதியற்றோர் எனும் சான்றிதழ் பெற விரும்பும் பிரிவினரும் கூட இனி வருங்காலங்களில் அதிகரிப்பார்கள்.  நிச்சயம் இதுவும் ஒருவகையான சமூக சீர்த்திருத்தம் தான். பெரியார் கனவு 
திருப்பத்தூர் சினேகா - தமிழ்நாட்டில் ‘ஜாதியற்றவர்’ எனும் அரசு சான்றிதழ் பெற்ற முதல் பெண்!


சினேகாவுக்கு 35 வயதாகிறது. திருப்பத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர். பிறந்தது முதல் இன்று வரையிலும் ஜாதிச் சான்றிதழ் இல்லாமல் தான் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார். ஆரம்பப் பள்ளிச் சேர்க்கை முதற்கொண்டு இன்று வரை அவர் பூர்த்தி செய்து வரும் விண்ணப்பங்கள் அனைத்திலும் ஜாதி, மதம் குறித்த தகவல்களை நிரப்பும் இடங்களனைத்தும் வெற்றிடங்களாகவே நீடிக்கின்றன.
சமீபத்தில் தமிழக அரசு சினேகாவுக்கு கேஸ்ட்லெஸ் அதாவது ஜாதி, மதமற்றவர் என்று சான்றிதழ் அளித்துள்ளது. அதிகாரப்பூர்வமாக ஜாதியற்றவர் என்ற சான்றிதழ் அளித்து அரசு அங்கீகரித்தவர்களில் சினேகா தான் முதல் நபர். அரசு ஜாதிச் சான்றிதழ்களை விநியோகிக்கும் ஒவ்வொருமுறையும் ஜாதியற்ற சான்றிதழ் ஒன்றை ஏன் வாங்கக் கூடாது என்று எனக்கு தோன்றிக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு சான்றிதழை வழங்கச் சொல்லி நான் அரசுக்குத் தொடர்ந்து விண்ணப்பித்துக் கொண்டே இருந்தேன். அந்த எதிர்பார்ப்பும், ஜாதியற்றவர் என்ற சான்றிதழ் பெற்றே தீர்வது எனும் ஏக்கமும் சினேகாவுக்கு இந்த மாதத்தின் துவக்கத்தில் ஈடேறியது. ஆம் இந்திய அரசு அப்படி ஒரு சான்றிதழை சினேகாவுக்கு அவர் எதிர்பார்த்தபடியே வழங்கி விட்டது.

என் குடும்பத்தில் நானும், என் பெற்றோரு உட்பட, தங்கை, கணவர் மற்றும் எனது மகள்கள் என அனைவருமே ஜாதியற்றவர்கள் என்ற அடையாளத்துடன் தான் இதுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசு, இப்போது வழங்கி இருப்பது அதற்கான சட்டப்பூர்வமான அங்கீகாரம் மட்டுமே. அந்த அங்கீகாரம் இல்லாத போதும் நாங்கள் ஜாதி, மத அடையாளமற்றவர்களாகத் தான் வாழ்ந்து கொண்டிருந்தோம். ஏனெனில் எங்கள் குடும்பத்தில் நாங்கள் அனைவருமே நாத்திகர்கள். என்கிறார் சினேகா.

இந்தியாவில் ஒருவரது பெயரைச் சொன்னாலே போதும் அவரது ஜாதி, மத அடையாளங்களைக் கண்டுபிடித்து விட முடியும் என்பதால் சினேகாவும் அவரது கணவரும் தங்களது மூன்று மகள்களுக்கும் அனைத்து மதங்களில் இருந்தும் பெயர்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை புத்த மதப் பெயர்களுடன் இணைத்து ஆதிரை நஸ்ரீன், அதிலா ஐரீன், ஆரிஃபா ஜெஸ்ஸி எனச் சூட்டியிருக்கிறார்கள்.

நாங்களாவது இப்போது தான் இப்படிப் பெயர் வைத்தோம் எங்கள் மகள்களுக்கு. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே என் மாமனார் தன் மகள்களுக்குத் தேர்வு செய்து வைத்த பெயர்களைப் பாருங்கள்... சினேகாவின் சகோதரிகளுக்கு மும்தாஜ் சூர்யா என்றும் ஜெனிஃபர் என்றும் பெயர் வைத்து மத அடையாளங்களை மறைக்க நினைத்தவர்கள் அவர்கள். அன்றைய காலகட்டத்தில் இது ஆச்சர்யம் தான் என்கிறார் சினேகாவின் கணவர் பார்த்திபராஜா.

மேலும் அவர் பேசியதிலிருந்து,  என் மாமனார்பி வி அனந்த கிருஷ்ணனும் மாமியார் மணிமொழியும் வழக்கறிஞர்கள். இருவருமே வெவ்வேறு ஜாதியைச் சார்ந்தவர்கள் என்பதோடு பகுத்தறிவுக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்ததோடு இடதுசாரிகளாகவும் இருந்த காரணத்தால் அவர்களால் அந்தக் காலத்திலும் இது சாத்தியமானது. என் மனைவி சினேகாவுக்கு தெலுங்கானாவில் போலீஸ் கஸ்டடியில் இறந்த சினேகலதா எனும் சமூகப் போராளியின் பெயரை அவர்கள் சூட்டி மகிழ்ந்தனர். சினேகாவின் பெயருக்கு முன்புள்ள எம் ஏ எனும் எழுத்துக்கள் அவரது பெற்றோரின் பெயர்களில் உள்ள முதல் எழுத்துக்களே! என்கிறார் பார்த்திபராஜா.

என் தாத்தா மதப் பற்றும் கடவுள் நம்பிக்கையும் கொண்டவராக இருந்த போதும் அவரது மூத்த மகனான பி வி பக்தவத்சலம் ஒரு வழக்கறிஞராக இருந்ததோடு கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்ட் ஆகவும் இருந்தார். அதனால் தான் என் தந்தையும் தனது மூத்த சகோதரரைப் பின்பற்றி ஜாதி, மத அடையாளங்களை விரும்பாதவராக வாழத் தொடங்கினார் என்கிறார் சினேகா.

அத்துடன் தனது குழந்தைப் பருவ நாட்களை நினைவு கூரும் போது... ‘முற்றிலும் வேறு ஒரு சூழலில் நாங்கள் வளர்ந்தோம். என்கிறார்.  என் பெரிய தாத்தா, தாத்தா மற்றும்  தந்தையைப் பார்க்க வரும் கம்யூனிஸ நண்பர்களால் வீடு எந்நேரமும் நிறைந்திருக்கும். அவர்களது கம்யூனிஸம், பகுத்தறிவு மற்றும் நாத்திக சிந்தனைகள் குழந்தைகளான எங்கள் மனதிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. அப்படியே வளர்ந்ததில் அதன் மீதான ஈடுபாடு வலுத்ததே தவிர எப்போதும் குறைந்ததே இல்லை’ என்கிறார்.

அத்துடன் , பள்ளியில் படிக்கையில் நண்பர்களோ அல்லது பிற வகுப்புத் தோழிகளோ கூட ஜாதி, மதம் குறித்துப் பேசினால் அல்லது கேள்வி எழுப்பினால் அவர்களிடம் தயங்காமல் ‘நாங்கள் ஜாதியற்றவர்கள்’ எனும் பதிலை அழுத்தமாகக் கூற பெரியாரிய சிந்தனை தங்களுக்கு மிகவும் உதவிற்று என்கிறார் சினேகா, சிலர் சொல்வார்கள்... சரி நீங்கள் வேண்டுமானால் ஜாதியற்றவர்களாக இருக்க முடியும், ஆனால் உங்களை மணப்பவர்கள் அப்படி இருக்க வேண்டுமே?! அவர்கள் இதையெல்லாம் நம்பக் கூடியவர்களாக அவற்றின் மீதெல்லாம் ஆர்வமுடையவர்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்? என; அத்தகைய சூழலில் நாங்கள் எங்களுக்குள் சொல்லிக் கொள்வது. நாம் நமது சித்தாந்தங்களின் மீதும் பகுத்தறிவு நம்பிக்கையின் பேரிலும் மிகுந்த பற்றுடையவர்களாகவும் அவற்றை வரும் தலைமுறையிலும் நிலைநாட்டக் கூடியவர்களாகவும் இருக்க நினைத்தால் அதற்கேற்றாற் போலவே நமது வாழ்க்கைத் துணைகளும் தாமே வந்தமையும். அப்படித்தான் பார்த்திபராஜா சினேகாவின் கணவரானார். என்கிறார்கள் சினேகா தம்பதியினர்.

எதிர்காலத்தில் தங்கள் மகள்களுக்கும் தங்களைப் போன்றே ஜாதி, மதங்களில் அக்கறையற்றவர்கள் வாழ்க்கைத் துணைவர்களாக அமைவார்கள் எனும் நம்பிக்கை இந்தத் தம்பதியினரிடையே மிகுந்திருக்கிறது. நம்பிக்கை மட்டும் போதாதில்லையா... அதனால் தனது மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கும் தன்னைப் போலவே ஜாதியற்றவர்கள் என்று அரசு அங்கீகாரத்துடன் கூடிய சான்றிதழ்களுக்காக விண்ணப்பித்திருக்கிறாராம் சினேகா. கூடிய விரைவில் அவர்களுக்கும் அத்தகைய சான்றிதழ் கிடைத்தே தீரும். 

பிறகென்ன? 

ஜாதிச் சான்றிதழ் பெறுவது போலவே ஜாதியற்றோர் எனும் சான்றிதழ் பெற விரும்பும் பிரிவினரும் கூட இனி வருங்காலங்களில் அதிகரிப்பார்கள். 

நிச்சயம் இதுவும் ஒருவகையான சமூக சீர்த்திருத்தம் தான். பெரியார் கனவு கண்ட சமூக சீர்த்திருத்தம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com