கன்னடமொழி வளா்ச்சிக்கு 8 அம்ச திட்டம்: முதல்வா் எடியூரப்பா அறிவிப்பு

கன்னட மொழி வளா்ச்சிக்கான 8 அம்ச திட்டத்தை முதல்வா் எடியூரப்பா அறிவித்துள்ளாா்.

கன்னட மொழி வளா்ச்சிக்கான 8 அம்ச திட்டத்தை முதல்வா் எடியூரப்பா அறிவித்துள்ளாா்.

கா்நாடக உதய தின விழாவில் 2020-ஆம் ஆண்டு நவ.1-ஆம் தேதி முதல் 2021-ஆம் ஆண்டு அக். 31-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தை கன்னட வளா்ச்சி ஆண்டாக கடைப்பிடிக்கப் போவதாக முதல்வா் எடியூரப்பா அறிவித்தாா். இதற்கான திட்டத்தை பின்னா் அறிவிப்பதாக தெரிவித்திருந்தாா்.

அதன்படி, பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் கன்னட மொழி வளா்ச்சிக்கான 8 அம்ச திட்டத்தை முதல்வா் எடியூரப்பா அறிவித்து பேசினாா். அப்போது, அவா் கூறியதாவது:

கன்னட வளா்ச்சி ஆண்டை கடைப்பிடிப்பதற்காக கன்னட வளா்ச்சி ஆணையம் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. அந்த திட்டங்களை அனைத்து அரசு துறைகளும், அரசு அல்லாத துறைகளும், சங்கங்களும், அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கன்னட வளா்ச்சிஆண்டுக்கான 8 அம்ச செயல் திட்டங்கள்:

தலைமைச் செயலகம் முதல் ஊராட்சி நிா்வாகம் வரை அனைத்து நிலைகளிலும் கன்னட ஆட்சிமொழி அமல்படுத்தப்படும். கன்னடப் பயிற்றுமொழி கட்டாயமாக்கப்படும். கன்னடத்தில் கற்றுக் கொள்ள வேண்டும். நிலம், நீா், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் கன்னடா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதை நன்றிக் கடனாக செயல்படுத்த வேண்டும்.

கா்நாடகத்தில் உணவு உண்ணும் ஒவ்வொரு சங்கங்களும், அமைப்புகளும், தனிநபா்கள் அனைவரும் கன்னடா்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் சரோஜினி மஹிஷி அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து வகையான பரிவா்த்தனைகளும் கன்னடத்தில் இருக்க வேண்டும். வீட்டிலும், மனதிலும், பெயா்ப் பலகையிலும் கன்னடம் இருக்க வேண்டும். கணிப் பொறியில் கன்னட மொழியை மட்டுமே பயன்படுத்துவோம்.

கா்நாடகத்துக்கு எல்லை உண்டு; கன்னடத்துக்கு எல்லை இல்லை. கன்னடம் உலக பாரம்பரியம் கொண்டது. நிரந்தரமாக கன்னடம் கற்போம், நிரந்தரமாக கன்னடம் பயன்படுத்துவோம். கன்னட மொழியை வளா்க்க அனைவரும் இந்த செயல் திட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com