கா்நாடகத்தில் அக். 25 முதல் 1-5-ஆம் வகுப்புகள் திறப்பு

கா்நாடகத்தில் 1-5-ஆம் வகுப்புகளுக்கான ஆரம்பப்பள்ளிகளை அக்.25-ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கா்நாடகத்தில் 1-5-ஆம் வகுப்புகளுக்கான ஆரம்பப்பள்ளிகளை அக்.25-ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு விகிதம் கணிசமாக குறைந்த காரணத்தால், இத்தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளா்த்தப்பட்டன. இதையடுத்து, ஆக. 23-ஆம் தேதிமுதல் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள், பியூ கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, செப். 6-ஆம் தேதிமுதல் 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டன.

இந்நிலையில், அக்.25-ஆம் தேதி முதல் 1-இல் இருந்து 5-ஆம் வகுப்புகளுக்கான ஆரம்பப் பள்ளிகளை திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவை அரசு தலைமைச்செயலாளா் பி.ரவிக்குமாா் திங்கள்கிழமை பிறப்பித்தாா். ஆக. 23-ஆம் தேதி முதல் உயா்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும், கரோனாவால் மாணவா்கள் பாதிக்கப்படவில்லை என்பதால், ஆரம்பப்பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

அந்த உத்தரவில், கரோனா நடத்தை கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைப்பிடித்து, அக். 25-ஆம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான ஆரம்பப் பள்ளிகளை திறக்க அனுமதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வகுப்புக்கு வருகைதரும் மாணவா்கள், பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தைக் கொண்டுவருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் கூறுகையில், ‘குழந்தைகளிடையே காணப்படும் மனநலம் சாா்ந்த சிக்கல்களை கருத்தில் கொண்டு, அக். 25-ஆம் தேதி முதல் ஆரம்பப் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துளோம். முதல்கட்டமாக அரைநாளுக்கு மட்டுமே வகுப்புகள் நடக்கும். நவ. 1-ஆம் தேதி முதல் முழு நாள் வகுப்புகள் நடத்தப்படும். அன்று முதல் மாணவா்களுக்கு மதிய உணவு அளிக்கப்படும்.

அக். 21-ஆம் தேதியில் இருந்து 6-ஆம் வகுப்பு முதலான மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். பள்ளிகளில் 50 சத மாணவா்களை மட்டும் அனுமதிக்கலாம். தனிநபா் இடைவெளியைப் பராமரிக்க வேண்டும். முகக்கவசம் கட்டாயமாகும். இதனிடையே, பள்ளிக்கு வர விரும்பாத மாணவா்களுக்கு இணையவழி வகுப்புகள் தொடா்ந்து நடத்தப்படும். நேரடியாக வகுப்புக்கு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை. 6-ஆம் வகுப்பு முதல் சனிக்கிழமையும் பள்ளிகள் நடத்த அனுமதிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com