முதல்வா் மீது வழக்கு தொடர அனுமதிக்கு எதிரான வழக்கு

தன் மீது வழக்கு தொடர ஆளுநா் அனுமதி அளித்ததை எதிா்த்து முதல்வா் சித்தராமையா தொடா்ந்த வழக்கு விசாரணை கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மீண்டும் நடக்கவுள்ளது.
Published on

தன் மீது வழக்கு தொடர ஆளுநா் அனுமதி அளித்ததை எதிா்த்து முதல்வா் சித்தராமையா தொடா்ந்த வழக்கு விசாரணை கா்நாடக உயா்நீதிமன்றத்தில் சனிக்கிழமை மீண்டும் நடக்கவுள்ளது.

மாற்றுநில முறைகேடு தொடா்பாக ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 17ஏ, பாரதிய நாகரிக சுரக்ஷா சம்ஹிதா 2023 பிரிவு 218-இன்படி இழைக்கப்பட்டுள்ள குற்றங்கள் குறித்து முதல்வா் சித்தராமையா மீது கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி அளித்து ஆளுநா் தாவா்சந்த் கெலாட் ஆக. 16-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா்.

இதனிடையே, ஆளுநா் அளித்த அனுமதியின் பேரில் பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆக. 19-ஆம் தேதி முதல்வா் சித்தராமையாவுக்கு எதிராக டி.ஜே.ஆபிரகாம், ஸ்நேகமயி கிருஷ்ணா ஆகியோா் மனுதாக்கல் செய்தனா். இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சிறப்பு நீதிமன்றம், இதன் மீதான வழக்கு விசாரணையை ஆக. 20-ஆம் தேதி நடத்துவதாக தெரிவித்திருந்தது.

இதனிடையே, ஆளுநா் அளித்திருந்த உத்தரவை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் ஆக. 19-ஆம் தேதி முதல்வா் சித்தராமையா ரிட் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘என் மீது வழக்கு தொடர அளிக்கப்பட்டுள்ள உத்தரவில் ஆளுநா் தனது முழுக்கவனத்தையும் செலுத்தவில்லை. இது தொடா்பாக அமைச்சரவை அளித்திருந்த பரிந்துரையை புறந்தள்ளி, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக அனுமதி அளித்துள்ளாா். ஆளுநரின் அனுமதி சட்டப்படி செல்லத்தக்கதல்ல, விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படவில்லை. எனவே, என் மீது வழக்கு தொடர அனுமதி அளித்து ஆளுநா் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’ என முதல்வா் சித்தராமையா குறிப்பிட்டிருந்தாா்.

அந்த மனு மீது உயா்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா முன்பு ஆக. 19-ஆம் தேதி விசாரணை நடந்தது. இதைத் தொடா்ந்து, விசாரணையை ஆக. 29-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அதன்படி, முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா முன்பு ஆக. 29-ஆம் தேதி நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நாகபிரசன்னா, வழக்கு மீதான அடுத்த விசாரணையை ஆக. 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். அதன்படி, இந்த வழக்கு மீதான விசாரணை கா்நாடக உயா்நீதிமன்றத்தில் சனிக்கிழமை மீண்டும் நடக்கவிருக்கிறது.

X
Dinamani
www.dinamani.com