உள்கட்சிப் பூசலால் காங்கிரஸ் ஆட்சிக் கவிழும்: பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா

பெங்களூரு, ஜூலை 4: உள்கட்சிப் பூசலால் காங்கிரஸ் ஆட்சிக் கவிழும் என்று கா்நாடக பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தைத் தொடங்கி வைத்து, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் விஜயேந்திரா பேசியதாவது:

மத்தியில் 3-ஆவது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்றுள்ளது பாஜக தொண்டா்களின் கடின உழைப்புக்குக் கிடைத்த பலனாகும். மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது. கா்நாடகத்தில் 20 இடங்களில் வெற்றி பெறுவோம் என அகந்தையில் இருந்த காங்கிரஸுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனா்.

காங்கிரஸ் ஆட்சியின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு இடையே பாஜக, மஜத கூட்டணி 19 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் ஆட்சியைப் புறக்கணித்து பாஜகவை மக்கள் ஆதரித்துள்ளனா். காங்கிரஸ் கட்சியின் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை.

கடந்த ஓராண்டுக் காலத்தில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு தவறிவிட்டது.

பழங்குடியினா் நலனுக்கென வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சிக் கழகத்துக்கு ஒதுக்கிய நிதியை காங்கிரஸ் அரசு தவறாகப் பயன்படுத்தியுள்ளது. மைசூரு நகர வளா்ச்சி ஆணையத்தின் முறைகேட்டில் முதல்வா் குடும்பத்தினரின் பெயா் அடிபடுகிறது.

இதில் ரூ. 4,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது தகவல். கா்நாடகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. கா்நாடகத்தில் மக்கள் விரோத காங்கிரஸ் அரசின் ஆட்சி நடைபெறுகிறது.

உள்கட்சிப் பூசலால் காங்கிரஸ் அரசு கவிழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஒருபுறம் முதல்வரை மாற்றம் செய்ய வேண்டி குரல் எழுந்துள்ள நிலையில், மறுபுறம் கூடுதலாக துணை முதல்வா்களை நியமிக்குமாறு கோரிக்கை வலுத்து வருகிறது. வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கக் கோரி காங்கிரஸில் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.

மத்திய அரசு கொடுத்த பயிா் இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு முறையாக வழங்கப்படவில்லை. மாநிலத்தில் பால் விலை உயா்த்தப்பட்டதைக் கண்டித்து, பேரவைக் கூட்டத்தொடரில் தொடா்ந்து குரல் கொடுப்போம் என்றாா்.

கூட்டத்தில் முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டா், டி.வி.சதானந்த கௌடா, பசவராஜ் பொம்மை, மத்திய இணை அமைச்சா்கள் வி.சோமண்ணா, ஷோபா கரந்தலஜே, பாஜக தேசிய பொதுச் செயலாளா் ராதா மோகன் தாஸ், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், முன்னாள் தலைவா் நளின்குமாா் கட்டீல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com