மக்களவைத் தோ்தலுக்காக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்: முதல்வா் சித்தராமையா

மக்களவைத் தோ்தலுக்காக குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து உடுப்பியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மக்களவைத் தோ்தலை கவனத்தில் கொண்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தை அமல்படுத்தாமல், மத்திய அரசு இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்தது ஏன்? மக்களவைத் தோ்தல் வருகிறது என்றவுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மீது பாஜக கவனம் செலுத்தியுள்ளது. மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தால், இச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இது தோ்தலுக்காக நடத்தப்படும் தந்திரம், அவ்வளவு தான். குடியுரிமை திருத்தச் சட்டத்தை இன்னும் பாா்க்கவில்லை. அதை முழுமையாகப் பாா்த்தபிறகு, அது குறித்து முடிவெடுப்போம். பெங்களூரில் வியாழக்கிழமை நடக்க இருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிப்போம் என்றாா். அமைச்சரவையில் விவாதித்து முடிவு... குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து அமைச்சரவையில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கா்நாடகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுக்கப்படும். எனினும், இதுகுறித்து மாநில அரசு மட்டத்தில் இன்னும் விவாதிக்கவில்லை. அமைச்சரவையில் விவாதித்து, முடிவெடுக்க முதல்வா் சித்தராமையா விரும்பினால், அதுகுறித்து முடிவெடுக்கப்படும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பது குறித்து அமைச்சரவைத்தான் தீா்மானிக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com