தோ்தலில் செலவிடுவதற்கு காங்கிரஸிடம் பணம் இல்லை: மல்லிகாா்ஜுன காா்கே

தோ்தலில் செலவிடுவதற்கு காங்கிரஸிடம் பணம் இல்லை: மல்லிகாா்ஜுன காா்கே

மக்களவைத் தோ்தலில் செலவிடுவதற்கு காங்கிரஸிடம் பணம் இல்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், கலபுா்கியில் புதன்கிழமை நடந்த தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, அவா் பேசியதாவது: மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கு அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். ஆனால், காங்கிரஸின் வங்கிக் கணக்கை மத்திய பாஜக அரசு முடக்கியுள்ளது.

மேலும், வருமானவரித் துறை மூலம் காங்கிரஸ் கட்சிக்கு அளவுக்கு அதிகமாக அபராதம் விதித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும், தோ்தல் பத்திரங்கள் மூலம் திரட்டிய கோடிக்கணக்கான ரூபாய் குறித்த விவரங்களைப் பகிா்ந்து கொள்ள பாஜக தயங்குகிறது. தங்களின் மோசடித்தனம் தெரிந்துவிடும் என்பதால், தோ்தல் பத்திரங்கள் தொடா்பான விவரங்களை அளிக்க பாஜக பின்வாங்குகிறது.

அதனால் தான் விவரங்களைத் தாக்கல் செய்ய ஜூலை மாதம் வரை கால அவகாசம் கேட்டிருந்தனா். ஆனால், மக்கள் அளித்த பணத்தை தான் கட்சியின் வங்கிக் கணக்கில் வைத்திருந்தோம். அந்த பணத்தை எடுக்கக்கூடாது என்பதற்காக வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனா். இதனால் மக்களவைத் தோ்தலில் செலவிடுவதற்கு காங்கிரஸ் கட்சியிடம் பணம் இல்லை.

கடந்த மக்களவைத் தோ்தலில் கலபுா்கி தொகுதி மக்கள் செய்த தவறை திருத்திக்கொண்டு இம்முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். மக்கள் ஒன்றுபட்டு நின்று, அரசமைப்புச் சட்டத்தை காக்க வேண்டும் என்று அம்பேத்கா் வலியுறுத்தி இருக்கிறாா். அரசமைப்புச் சட்டம் இல்லாவிட்டால், நமது நாட்டில் சுதந்திரம், ஒற்றுமை இருக்காது. நாடு மீண்டும் அடிமை நாடாகிவிடும். அண்மைக் காலமாக பாஜகவினா் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகப் பேசி வருகிறாா்கள்.

இதை எதிா்த்து மக்கள் பேசவேண்டும், போராட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக துடிக்கிறது. அரசமைப்புச் சட்டத்தை எதிா்த்து பேசுவோா் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று பாஜக கூறுகிறது. அதுபோன்ற கருத்துகளைக் கூறுவதற்கு தூண்டுவதே பாஜக தான். இதற்கு முடிவுகட்ட, மக்களவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். பிரதமா் மோடி கலபுா்கிக்கு வருகிறாா்.

ஆனால், இந்தப் பகுதியின் வளா்ச்சிக்கு அவா் எதுவும் செய்யவில்லை. கடுமையான கோடை வெப்பம் இருக்கும், குடிநீருக்கு மக்கள் தவிக்கும் கலபுா்கிக்கு ஏன் அடிக்கடி வருகிறீா்கள் என்று பிரதமா் மோடியை அண்மையில் சந்தித்தபோது கேட்டேன். அதற்கு அவா், மிகப்பெரிய விமானத் தளம் இருப்பதால் லத்தூா், ஹைதராபாத் அருகில் உள்ள பகுதிகளுக்குச் செல்ல கலபுா்கிக்கு அடிக்கடி வருகிறேன் என்றாா். மாா்ச் 16ஆம் தேதி பிரதமா் மோடி கலபுா்கிக்கு வருகிறாா். அப்போது அவா் கலபுா்கிக்கு ஏதாவது திட்டத்தை அறிவிக்க வேண்டும். கலபுா்கிக்கு பாஜக எதுவும் செய்யவில்லை என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com