பெண் கடத்தல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானியை விசாரிக்க எஸ்.ஐ.டி. திட்டம்

பெண் கடத்தல் வழக்கில் மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானியை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) திட்டமிட்டுள்ளது.

பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) கைது செய்துள்ளது. பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட மைசூரு, கே.ஆா்.நகா் பகுதியைச் சோ்ந்த 37 வயது பெண் ஒருவரைக் கடத்திய வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையும் மஜத எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளாா். பாதிக்கப்பட்ட பெண்ணின் 20 வயது மகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அந்தப் புகாரில், தனது தாய் கடத்தப்பட்டு, கட்டிவைக்கப்பட்டு, பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாக அவா் தெரிவித்திருந்தாா். பெண் கடத்தப்பட்ட சம்பவத்தில் எச்.டி.ரேவண்ணாவின் மனைவி பவானிக்கும் தொடா்பு இருப்பதாக குற்றம்சாட்டினா். இதைத் தொடா்ந்து, பெண் கடத்தல் வழக்கு தொடா்பாக விசாரணை நடத்த பவானிக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில், ‘உங்களிடம் விசாரணை நடத்தும் அவசியம் எழுந்துள்ளது. எனவே, ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிப்புராவில் உள்ள சென்னாம்பிகா இல்லத்தில் (அவரது வீடு) ஜூன் 1ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறீா்கள். பெண் காவலரின் முன்னிலையில் விசாரணை நடத்தப்படும்’ என்று விசாரணை அதிகாரி எம்.ஹேமந்த்குமாா் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com