பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். பெங்களூரு, விதான செளதாவில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் நிலுவை கடன்தொகையைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இதற்காக விவசாயிகள் யாரும் குழப்பமடைய வேண்டாம். பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான உத்தரவு அடுத்த சில நாள்களில் வெளியிடப்படும். விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வதாக நிதிநிலை அறிக்கையிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால் வங்கிகள் விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விவசாயிகளின் நலன் காப்பதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது.
பயிர்க்கடன் தொடர்பாக, அரசு வழிகாட்டுதல்களை வடிவமைத்து வருகிறது. விவசாயிகளுக்கு சாதகமாகும் வகையில் பயிர்க்கடன் தள்ளுபடிதிட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
பழைய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாததால், புதிய பயிர்க்கடன் கொடுக்கப்படவில்லை என்ற புகார்கள் வந்துள்ளன. பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டால், இந்தப் பிரச்னை முழுமையாகத் தீர்க்கப்படும் என்றார் குமாரசாமி.