பெங்களூரில் பலத்த மழை பெய்ததால், வாகனப் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
பெங்களூரு உள்பட கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பரவலாகப் பெய்து வருகிறது. இந்த நிலையில், பெங்களூரில் திங்கள்கிழமை இரவு 7 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
இதனால் சாந்தி நகர், ராஜாஜி நகர், மல்லேஸ்வரம், பிடிஎம் லேஅவுட், எச்எஸ்ஆர் லேஅவுட், மெஜஸ்டிக், காந்திநகர், மடிவாளா, மகாலட்சுமிலேஅவுட், கோரமங்களா, வில்சன்கார்டன், மாகடிசாலை, பசவவேஸ்வரநகர், எச்.ஏ.எல் சாலை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பெங்களூரில் அரை மணி நேரம் பலத்த மழை தொடர்ந்து பெய்ததால், சாலைகளில் வெள்ளம்போல தண்ணீர் தேங்கியது. இதனால் வேலைமுடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மக்கள் இன்னலுக்கு உள்ளானார்கள். சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து தடைபட்டது. பெரும்பாலான சாலைகளில் சாரைசாரையாக வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்க நேர்ந்தது.