விதிமுறைகளை மீறி கர்நாடகத்தில் தங்கியுள்ள வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரு யுவானிகா அரங்கில் செவ்வாய்க்கிழமை சமூக நலத் துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பெங்களூரு உள்பட மாநில அளவில் சட்ட விதிமுறைகளை மீறி வெளிநாட்டினர் குடியேறியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த வாரம் தீவிரமாக சோதனை நடத்தியதில், விதிமுறைகளை மீறி வசிக்கும் 107 வெளிநாட்டினர் அடையாளம் காணப்பட்டனர். அதில் பெரும்பாலானவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
107 பேர் மட்டுமின்றி, மாநில அளவில் விதிகளை மீறி தங்கியுள்ள வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரில் சட்ட விதிகளை மீறி ஆப்கானிஸ்தான் நாட்டைச் 100 பேர் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர்களையும் விரைவில் அடையாளம் கண்டு, அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மாநிலத்தில் வெளிநாட்டினர் குடியேறி வாழ்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லை. ஆனால், அவர்கள் அதற்கு தேவையான ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்.
மேலும், மாநிலத்தில் கூட்டணி அரசு சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. இதனால், பாஜக பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது. கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது என்றார்.