போதைப்பொருள் விற்பனை, கடத்தலைத் தடுக்க வேண்டும் என்று பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சுனில்குமாரிடம் பாஜகவினர் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதுதொடர்பாக கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் தலைமையிலான பாஜகவினர் திங்கள்கிழமை மனுவை அளித்தனர். இதனைத் தொடர்ந்து, அசோக் செய்தியாளர்களிடம் கூறியது: -
பெங்களூரில் போதைப்பொருள் விற்பனை செய்வது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு கடத்துவதும் அதிகரித்துள்ளது. இதனை உள்துறை அமைச்சர்
ஜி.பரமேஸ்வர், சட்டப் பேரவையின் கூட்டத்திலேயே
தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள்களுக்கு கல்லூரி மாணவர்கள், தொழிலாளிகள் அடிமையாகியுள்ளனர். இதனை தடுக்க போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் விற்பனையை மட்டுமின்றி கடத்தலைத் தடுக்கவும் கர்நாடக அரசு ஆர்வம் காட்டாமல் உள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்: உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அமைப்பதில்லை என்று அந்தக் கட்சிகளின் மேலிடம் முடிவு செய்துள்ளது. இரு கட்சிகளிடையே கூட்டணி ஏற்பட்டு, கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்துள்ளபோதும், தொண்டர்களிடயே இன்னும் ஒற்றுமை ஏற்படவில்லை. இதனால் ஆட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது.
முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியதுபோல, மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அந்தக் கட்சிகளின் கூட்டணி முறிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதனால் மக்களவைத் தேர்தலில் பாஜக அதிகம் பயனடைய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
பேட்டியின்போது எம்எல்ஏக்கள் அஸ்வத்நாராயணா, ரவிசுப்ரமண்யா, எம்எல்சிக்கள் தாராஅனுராதா, தேஜஸ்வினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.