"மக்களைச் சேர்க்கும் பாலம்தான் மொழி'

னைத்து மக்களையும் சேர்க்கும் பாலம்தான் மொழி. அது பிரிக்கும் கருவி கிடையாது  என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் கன்னடத் துறை தலைவரும், எழுத்தாளருமான தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.
Published on

அனைத்து மக்களையும் சேர்க்கும் பாலம்தான் மொழி. அது பிரிக்கும் கருவி கிடையாது  என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் கன்னடத் துறை தலைவரும், எழுத்தாளருமான தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.
பெங்களூரு, வெங்கடேஷ்புரத்தில் உள்ள பெங்களூரு தமிழ்ச் சங்க காமராசர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில்,   "தமிழ்-கன்னட இலக்கியங்களில் வசன இலக்கியத்தின் பரவல்-  தாக்கம்' எனும் தலைப்பிலான  சிறப்புச் சொற்பொழிவு  திங்கள்கிழமை நடைபெற்றது.  பசவசமிதியின் ஆதரவுடன் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்ச்செல்வி மேலும் பேசியது:-
 அரசியல் காரணங்களுக்காக அண்மைக்காலமாக தமிழர்-கன்னடர் இடையே நிலவிவந்த நல்லுறவுக்கு ஊறு விளைவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் இலக்கியம் எப்போதும் ஒன்று சேர்க்கும் வேலையைதான் செய்யும்.  இதற்கு சான்றாக இந்த நிகழ்ச்சியை கருதுகிறேன். 
ஒரே தாயின் இரு குழந்தைகளைப் போல கன்னடம், தமிழ்  மொழிகள்உள்ளன.  ஒரு காலத்தில் தென் இந்தியா முழுவதும் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு உள்ளிடக்கிய திராவிட மொழிகள் பேசப்பட்டுவந்தன. 
மொழிகளிடையே இலக்கிய ஒற்றுகை: கன்னட மொழி, கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் சில மாறுபாடுகளுடன் வெவ்வேறு முறைகளில் பேசப்படுகிறது. அதேபோல, திராவிட மொழியும் தென்னிந்தியாவின் ஒவ்வொரு வட்டாரத்திலும் மாறுபட்ட பேச்சுமொழியாக பேசப்பட்டு வந்தன. அவையே பிற்காலத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுமொழிகளாக பிரிந்தன. தற்போது பேசப்படும் கன்னடமும், வெவ்வேறு மொழியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 
திராவிட மொழியின் அறிகுறிகள் எல்லா மொழிகளிலும் தென்படுகின்றன. எனவே, இவற்றை சகோதர மொழிகள் என்று கூறலாம். திராவிடமொழிகளுக்கு இடையே அரசியல் ஒற்றுமை இல்லாவிட்டாலும், இலக்கிய, பண்பாட்டு ஒற்றுமை உள்ளது. 
பசவண்ணரின் வசன இலக்கியத்தில் சைவ இலக்கியங்களின் தாக்கம்: இந்த வகையில் கர்நாடகத்தில் 12-ஆம் நூற்றாண்டில் பசவண்ணரால் பரவலாக்கப்பட்ட வசன இலக்கியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சைவ இலக்கியங்களின் தாக்கம் உள்ளது. பசவண்ணரை போல நூற்றுக்கணக்கான இலக்கியவாதிகள், மக்களால் பேசப்பட்ட பேச்சு மொழியில் படைத்த இலக்கியமே வசன இலக்கியமாக மலர்ந்தது. இலக்கண மரபுகளை உடைத்து படைக்கப்பட்டதே வசன இலக்கியம்.
12-ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் சமூக,பொருளாதார, கல்வி சீர்த்திருத்தத்துக்கு வித்திட்ட வசன இலக்கியங்கள் தமிழகத்தின் சைவ இலக்கியங்களில் இருந்து தனது ஆளுமையை பெற்றுள்ளதை காணலாம். 
கி.பி. 4 முதல் கி.பி. 10-ஆம் நூற்றாண்டுவரை சைவ இலக்கியம் தமிழகத்தில் வீச்சுடன் இயங்கியது. சைவ சமயகுரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோரின் தேவாரமும், திருவாசகமும் பசவண்ணரின் வசன இலக்கியத்தில்தாக்கத்தை ஏற்படுத்தின. 
சைவ சமயத்தை வளர்த்தெடுத்த 63 நாயன்மார்களின் இலக்கியங்களில் கடவுள் துதி மட்டுமல்லாது, சமூகச் சீர்த்திருத்த கருத்துகளும் காணக்கிடைத்தன. 
ஜாதி, வருணப் பேதம் உள்ளிட்டவற்றை சாடியுள்ளனர். அதை முன்மாதிரியாக கொண்டே பசவண்ணர் உள்ளிட்ட வசனக்காரர்கள் வசன இலக்கியத்தை படைத்து மக்களிடையே சமூக சீர்த்திருத்த கருத்துகளை விதைத்தனர். இதுதேவர தாசிமையா என்ற வசனக்காரர் தனது வசனத்தில் குறிப்பிடுகிறார்.
வசனக்காரர்கள் குடும்பம், பொருளாதாரம், கோயில்கள் குறித்து நல்லபல கருத்துகளை தெரிவித்து மக்களை செம்மையாக்க முற்பட்டுள்ளனர். அதேபோல, வசன இலக்கியமும் தமிழகத்தில் பரவின. பசவண்ணர் முன்வைத்த லிங்கதீட்சை 17-ஆம் நூற்றாண்டுமுதல் தமிழகத்தில் கடைபிடிக்கப்படுகிறது என்றார் அவர்.
விழாவுக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் தலைமை வகித்தார். பசவசமிதி செயலர் பவிகட்டே,  நா.தாசு, ஆசீர்வாதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்