ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் கொலை வழக்கில் 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு கிரிநகர் காவல் சரக போலீஸாரிடம் கடந்த ஜூன் 28-இல் வாணி என்பவர் அளித்த புகார் மனுவில், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் தனது கணவர் பாலாஜியை காணவில்லை என்று கூறியிருந்தார்.
அதே நாளில் பாலாஜியின் நண்பர் பிரசாத் பாபுவையும் காணவில்லை என்று ஆர்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, போலீஸார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில், சந்தேகத்தின்பேரில் ஜே.பி. நகர் சாரக்கியைச் சேர்ந்த தேஜஸ் (29), ஜெயநகரைச் சேர்ந்த அனில் (29), சதீஷ் (24) ஆகிய 3 பேரை போலீஸார் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் பணப் பிரச்னையால் இருவரையும் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் அளித்த தகவலின் பேரில் ஜெயநகரைச் சேர்ந்த மணிகண்டன் (28), அனந்த் (29), கிருஷ்ணா (28), ஜே.பி.நகரைச் சேர்ந்த ஹரீஷ்குமார் (37), முகேஷ் (26), பாலாஜி (25), யுவராஜ் (31) ஆகிய 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 10 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.