மகதாயி நதிநீர்ப் பங்கீட்டில் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது அவசியம் என கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.
இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மகதாயி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக பல ஆண்டுகளாக கர்நாடகம் போராட்டம் நடத்தி வந்தும், நடுவர் மன்றம் மாநிலத்தின் குடிநீர், நீர்ப்பாசனம், மின் உற்பத்திக்கு 13.42 டிஎம்சி மட்டுமே வழங்க உத்தரவிட்டுள்ளது. இது நமக்கு கிடைத்த முழுமையான வெற்றியல்ல. எனவே, இதுகுறித்து மேல்முறையீடு செய்வது அவசியம். நாம் எதிர்பார்த்த வெற்றிக் கிடைக்கும் வரை தொடர்ந்து போராட கர்நாடக மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
மேலும் முதல்வர் குமாரசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணா ஆகியோர் தொடர்ந்து வட கர்நாடகத்தை புறக்கணித்து வருகின்றனர். பெலகாவியில் அமைக்கவிருந்த கேசிஎப் அலுவலகம், ஹாசன் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு உலக வங்கியின் கடிதத்தை காரணமாக ரேவண்ணா கூறியுள்ளார். உலக வங்கி அந்த கடிதத்தில் என்ன தெரிவித்துள்ளது என்பதனை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.