"பாஜக தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது'

தொகுதிவாரியாக மக்கள் பிரச்னைகளை அறிந்து தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வருகிறோம் என்று பாஜக தேசிய பொதுச் செயலரும்,  மாநில பொறுப்பாளருமான முரளிதர ராவ் தெரிவித்தார்.

தொகுதிவாரியாக மக்கள் பிரச்னைகளை அறிந்து தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வருகிறோம் என்று பாஜக தேசிய பொதுச் செயலரும்,  மாநில பொறுப்பாளருமான முரளிதர ராவ் தெரிவித்தார்.
பெங்களூரில் திங்கள்கிழமை  பாஜக மக்கள் சக்தி பிரிவு சார்பில் நடைபெற்ற விழாவில் அவர் பேசியது: -
மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மாற்று சிந்தனையோடு செயல் திட்டங்களை வகுத்து செயல்படும் கட்சியாக பாஜக திகழ்கிறது. 
கடந்த தேர்தல்களின்போது, 15 அறிவுஜீவிகள் ஒரு அறையில் உட்கார்ந்து கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரித்து
வெளியிடுவார்கள். 
நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த முறையை மாற்றி, தொகுதி வாரியாக மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து, அதற்கான தீர்வுகளையும் அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வருகிறோம்.
 224 தொகுதிகளில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 15 துறைகளைச் சேர்ந்தவர்களிடம் அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளைக் கேட்டறிந்துள்ளோம். இணையதளம் மூலம் 2.5 லட்சம் பேர் ஆலோசனை தெரிவித்துள்ளனர். 
3 லட்சம் பேர் செல்லிடப்பேசிகள் மூலம் தவறிய அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு வருகின்றனர். தொகுதிவாரியாக மக்கள் பிரச்னைகளை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது. 
60 ஆண்டுகால ஆட்சியில் இது போன்று அணுகுமுறையை எந்த கட்சியும் மேற்கொள்ளவில்லை. அதற்கு முன்னோடியாக பாஜக திகழ்கிறது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும்,  கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலும் சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்பது பாஜகவின் நிலையாக உள்ளது. 
பாஜக ஆட்சியை பிடித்தால் விவசாயிகள் தற்கொலை இல்லாத மாநிலமாக கர்நாடகத்தை  ஆக்குவோம் என்றார் அவர். நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன், பாஜக மாநிலச் செயலர் ரவிக்குமார், மக்கள் சக்தி பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com