பிரதமர் மோடியின் வருகைக்காக காத்திருக்கும் கர்நாடக பாஜக!

சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடியின் வருகையை கர்நாடக பாஜக எதிர்பார்த்து காத்திருக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடியின் வருகையை கர்நாடக பாஜக எதிர்பார்த்து காத்திருக்கிறது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை நம்பிக்கையோடு தொடங்கிய பாஜக, தற்போது சோர்ந்து காணப்படுகிறது. கர்நாடகத்தில் அதிகளவில் வசிக்கும் லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த எடியூரப்பாவை முன்னிலைப்படுத்திய பாஜக, தேர்தல் வெற்றி எளிதில் கிடைத்துவிடும் என்று நம்பியது. 
இதேபோல, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் அரசியல் கணக்குகள் கர்நாடகத்தின் தேர்தல் கணக்கை பாஜகவுக்கு சாதகமாக்கிவிடும் என்றும் அக்கட்சி நம்பியது. ஆனால், அந்த நம்பிக்கைகள் கரைந்துகொண்டே வருவது பாஜக தொண்டர்களின் சோர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. 
முகநூல், சுட்டுரை, கட்செவி, ஒலிப்பதிவு பிரசாரங்களில் பாஜக தீவிரமாக இருக்கிறது. விவசாயிகளின் தோழன் என்று கூறிக்கொள்ளும் எடியூரப்பா, 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த ஆண்டு நவ.2-ஆம் தேதி முதலே பிரசாரத்தைத் தொடங்கினார். குஜராத், உத்தரபிரதேசத்தில் இருந்து தொழில்முறை பயிற்சிபெற்ற தேர்தல் செயல்பாட்டாளர்களை களமிறக்கி பிரசாரத்தில் பாஜக ஈடுபட்டது. 
ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் பிரசார கட்டமைப்பையும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டது. கர்நாடகத்துக்கு அடிக்கடி வந்த அமித்ஷா, கர்நாடக பாஜகவுக்கு பல்வேறு செயல்திட்டங்களை வகுத்தளித்து, அவ்வப்போது அது சரியாக நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை பெங்களூரிலே முகாமிட வைத்தார். இது எதுவுமே பாஜகவின் வெற்றிக் கீற்றை வெளிப்படுத்தவே இல்லை. 
முதல்வர் சித்தராமையாவின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் இருப்பது உணரப்பட்டாலும், அதை தேர்தல் பிரசாரமாக முன்னிலைப்படுத்தும் தார்மிக உரிமை எடியூரப்பாவுக்கு இருப்பதாக மக்கள் கருதவில்லை. 
மேலும் சித்தராமையா அரசின் ஊழல்களை ஆதாரங்களுடன் பகிரங்கப்படுத்த எடியூரப்பாவும், பாஜகவும் தவறிவிட்டன. முந்தைய பாஜகவின் ஊழல்களை மறந்துவிடாத மக்கள், சட்ட விரோத சுரங்கத் தொழில் தொடர்பான லோக் ஆயுக்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட காரணத்தால் 2011-இல் முதல்வர் பதவியை துறந்த எடியூரப்பா, அதற்காக 21 நாள்கள் சிறைவாசத்தையும் அனுபவித்திருந்தை நினைவூட்டுகிறார்கள். 
ஊழல் குற்றச்சாட்டு முதல்வர் சித்தராமையாவின் அரசின் செல்வாக்கை குறைத்துவிடவில்லை. லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த உயர்ந்த தலைவர் எடியூரப்பா என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் லிங்காயத்து சமுதாயத்துக்கு தனிமத அங்கீகாரம் வழங்க மத்திய அரசுக்கு முதல்வர் சித்தராமையா பரிந்துரைத்துள்ளது, அச்சமுதாய வாக்குகளை பிளவுபடுத்திவிட்டது. 
இந்த நிலையிலும் எடியூரப்பா அதிகளவில் வாக்குகளை பெறுவார் என்றாலும், அது பாஜகவின் வெற்றிக்கு போதுமானதாக இல்லை. விவசாயிகளின் தோழன் என்று கூறிக்கொள்ளும் எடியூரப்பா, தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய முன்வைக்கும் கோரிக்கைக்கு பதிலளிக்க முடியாமல் திணறுகிறார்.
பெரு தொழில் நிறுவனங்களுக்கு கடன் தொகையை தள்ளுபடி செய்துவிட்டு, விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய தயங்குவதேன் என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள். எனவே, விவசாயிகளின் ஆதரவையும் முழுமையாக பெறமுடியாமல் பாஜக தவிக்கிறது.
 டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவே ஆட்சிக்கு வந்திருக்கிறோம் என்று மத்திய இணையமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே கூறிய கருத்து, தாழ்த்தப்பட்ட  மக்களிடையே பாஜகவுக்கு அவப் பெயரை ஏற்படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளின் தொண்டர்கள் படுகொலை செய்யபட்டிருப்பதை முன்னிலைப்படுத்தி சட்டம்- ஒழுங்கு பிரச்னையை பாஜக எழுப்பியது. 
கர்நாடகத்தில் கொலை செய்யப்பட்ட அனைத்து ஹிந்துக்களுக்காக பேசாமல், தங்கள் அமைப்பினருக்காக பரிந்து பேசிவருவதாகக் கூறப்பட்டதால், அந்த பிரசாரமும் மக்களிடம் எடுபடவில்லை. பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, கடந்த 2 மாதங்களில் அடிக்கடி கர்நாடகத்துக்கு வந்து பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசினார். 
மேலும் பல்வேறு ஹிந்து பீடங்களின் மடாதிபதிகளைச் சந்தித்து ஜாதி ரீதியான ஆதரவைத் திரட்டினார். அமித்ஷா கலந்து கொண்ட கூட்டங்களில் போதுமான மக்கள் திரளவில்லை. இதை சுட்டிக்காட்டும் பாஜகவினர், அமித்ஷா நல்ல தேர்தல் நிர்வாகியே தவிர மக்களை ஈர்க்கும் ஆற்றலை பெற்றவர் அல்ல என்று கூறிவருகிறார்கள்.
அப்படியானால், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை வெற்றிபெறும் எண்ணம் பாஜகவுக்கு இல்லையா? என்று இயல்பாக கேள்வி எழும். சட்டப்பேரவைத் தேர்தலை வெற்றிபெற, பாஜகவுக்கு சாதகமாக மாற்றும் ஆற்றல் பிரதமர் மோடிக்கு மட்டுமே உள்ளதாக அக்கட்சியின் தொண்டர்கள் எண்ண தொடங்கியுள்ளனர். 
கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசிகட்டத்தில் பிரதமர் மோடி 30-க்கும் அதிகமான கூட்டங்களில் கலந்து கொண்டனர். இதன்விளைவாக, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்திருக்க வேண்டிய தோல்வி தவிர்க்கப்பட்டது. இதேபோல, கர்நாடகத்தில் பாஜகவின் தோல்வியைத் தவிர்க்கும் ஆற்றல் பிரதமர் மோடிக்கு உள்ளதாக அக்கட்சியினர் நம்புகிறார்கள். 
எனவே, ஏப்.29-ஆம் தேதிமுதல் மே 10-ஆம் தேதி சுமார் 15 கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி திட்டமிட்டிருக்கிறார். பிரதமர் மோடியின் பிரசாரம், பாஜகவின் வெற்றியை உறுதி செய்யும் என்று அக்கட்சியினர் நம்புகிறார்கள். எனவே, பிரதமர் மோடியின் வருகைக்காக கர்நாடக பாஜக எதிர்பார்த்து காத்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com