Enable Javscript for better performance
லிங்காயத்து சமுதாயத்துக்கு மதச் சிறுபான்மையினர் அங்கீகாரம்: வீரசைவ மகாசபை கடும் எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    லிங்காயத்து சமுதாயத்துக்கு மதச் சிறுபான்மையினர் அங்கீகாரம்: வீரசைவ மகாசபை கடும் எதிர்ப்பு

    By DIN  |   Published on : 24th March 2018 05:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    லிங்காயத்து சமுதாயத்துக்கு மதச்சிறுபான்மையினர் அங்கீகாரம் வழங்கும் கர்நாடக அரசின் முடிவுக்கு வீரசைவ மகாசபை கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
    பசவண்ணரின் தத்துவங்களைப் பின்பற்றும் லிங்காயத்து மற்றும் வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தினருக்கு தனிமத அங்கீகாரம் வழங்குவதோடு, அம்மதத்தை சிறுபான்மையினராக அங்கீகாரமளிக்க கர்நாடக அமைச்சரவை மார்ச் 19-ஆம் தேதி தீர்மானம் மேற்கொண்டது.
    நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலான அறிஞர் குழு அளித்திருந்த அறிக்கையின் அடிப்படையில் லிங்காயத்து சமுதாயத்துக்கு மதச்சிறுபான்மையினராக அங்கீகாரம் வழங்க கர்நாடக மொழிச் சிறுபான்மையினர் ஆணையம், கர்நாடக அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. மாநில அரசின் இந்த முடிவு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    இந்நிலையில், கர்நாடக அரசின் முடிவு குறித்து விவாதிக்க பெங்களூரில் வெள்ளிக்கிழமை வீர சைவ மகாசபையின் செயற்குழு கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் கர்நாடக அரசின் முடிவை கடுமையாக எதிர்த்துள்ளது. இதுகுறித்து வீர சைவ மகாசபையின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷானமூர் சிவசங்கரப்பா கூறியது:
    லிங்காயத்து மற்றும் வீரசைவர் சமுதாயத்தினர் ஒன்றுதான். எனவே, இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு எடுத்த முடிவு சரியல்ல. இந்தமுடிவை கடுமையாக எதிர்ப்போம். மதச் சிறுபான்மையினராக அங்கீகரிக்க பரிந்துரைத்திருக்கும் வாசகத்தில் லிங்காயத்து/வீரசைவர் என்று இருக்க வேண்டும். மாறாக, பசவண்ணரின் தத்துவங்களை ஏற்கும் லிங்காயத்து மற்றும் வீரசைவ லிங்காயத்து என்று அரசு கூறியிருப்பதை ஏற்கமுடியாது.
    2013-ஆம் ஆண்டில் ஏற்கெனவே முன்வைத்திருந்த கோரிக்கையின்படி, வீரசைவர்/லிங்காயத்து சமுதாயத்திற்கு மதச் சிறுபான்மையினர் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்ள கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai