Enable Javscript for better performance
காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் கேரளத்துக்குப் பயணம்- Dinamani

சுடச்சுட

    

    ஆட்சி அமைக்க ஆளுநர் வாய்ப்பு தராததால் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் கேரளத்துக்குச் சென்றனர்.
    கர்நாடக சட்டப்பேரவையில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் அசாதாரண அரசியல் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்புவிடுத்திருந்தார். அதன்படி, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, கர்நாடகத்தின் 23-ஆவது முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
    222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 104 இடங்களில் வென்றுள்ள பாஜகவுக்கு ஆட்சி அமைக்க குறைந்தது 112 இடங்கள் தேவைப்பட்டது. எனினும், தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய்வாலா, எடியூரப்பாவுக்கு வாய்ப்பளித்துள்ளார். மேலும் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 15 நாள்கள் கால அவகாசம் கொடுத்திருக்கிறார். 
    இந்நிலையில், பாஜகவினரின் ஆசைவார்த்தைகளுக்கு இணங்கி எந்த எம்எல்ஏவும் கட்சித் தாவிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் காங்கிரஸ், ஆனந்த்சிங் நீங்கலாக முதல்வர் சித்தராமையா உள்பட தங்கள் எம்எல்ஏக்கள் 77 பேரையும் பெங்களூரு புறநகர் பகுதியில் ராமநகரம் மாவட்டத்தில் உள்ள பிடதி நகரில் அமைந்துள்ள ஈகிள்டன் தங்கும் விடுதிக்கு மே 16-ஆம் தேதி அழைத்துசென்றது. 
    எடியூரப்பா வியாழக்கிழமை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதால், அதை கண்டித்து காங்கிரஸ் மற்றும் மஜதவின் முன்னணித் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் இரு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பங்கேற்றுவிட்டு தங்கள் விடுதிகளுக்குத்
    திரும்பினர்.
    இதனிடையே, ஈகிள்டன் தங்கும் விடுதிக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை எடியூரப்பா அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, பாஜகவினர் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை தொலைபேசி வழியே தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளதாக தெரிகிறது. இதை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒருசிலர் உறுதி செய்தனர். 
    இந்நிலையில், கர்நாடகத்தில் தங்கியிருந்தால் பாஜகவினரின் ஆசை வார்த்தைகள் அல்லது மிரட்டலுக்கு எம்எல்ஏக்கள் அடிபணிய நேர்ந்துவிடும் என்பதை உணர்ந்த காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள், தங்கள் எம்எல்ஏக்களை கேரள மாநிலத்திற்கு அழைத்து செல்ல கூட்டாக முடிவு செய்தனர். அதன்படி, கேரள மாநிலம், கொச்சின் நகரில் உள்ள தங்கும் விடுதிக்கு (ரிசார்ட்) பெங்களூரிலிருந்து விமானத்தில் இருகட்சிகளின் எம்எல்ஏக்களும் பயணமாகினர்.
    இந்நிலையில், எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது தொடர்பான வழக்கில் மே 18-ஆம் தேதி தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இந்தத் தீர்ப்பை பார்த்துக் கொண்டு மீண்டும் கர்நாடத்துக்கு திரும்புவது குறித்து முடிவெடுப்பார்கள் என்று தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai