Enable Javscript for better performance
ஜனநாயகத்தை அழிக்க பாஜக முயற்சி: எச்.டி.குமாரசாமி- Dinamani

சுடச்சுட

    

    மத்திய பாஜக அரசு நாட்டில் ஜனநாயகத்தை அழிக்க முற்பட்டுள்ளதாக கர்நாடக மஜத தலைவர் எச்.டி.குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.
    இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றிருக்கிறார். சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலம் இல்லாத பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய்வாலா அழைப்புவிடுத்தது சரியல்ல. இதை வன்மையாக கண்டிக்கிறோம். 
    ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். மத்திய பாஜக அரசு செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு, ஜனநாயகத்தை சீரழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. பாஜகவின் ஜனநாயக விரோதப்போக்கை எதிர்த்து போராடுவதற்கு பாஜக அல்லாத அனைத்து அரசியல் கட்சிகளும் தேசிய அளவில் ஒன்று திரள வேண்டும். 
    இதற்கான முயற்சியில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா முயற்சி எடுக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் அனைத்து மாநிலக் கட்சிகள்,அக்கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்கள், தலைவர்கள் ஜனநாயகத்தை காப்பதற்காக பாஜகவுக்கு எதிராக திரள வேண்டும். மம்தா பானர்ஜி, சந்திரபாபுநாயுடு, சந்திரசேகர்ராவ், மாயாவதி, நவீன்பட்நாயக் உள்ளிட்ட தலைவர்கள் நாட்டின் நலன் கருதி, கருத்துவேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு போராட வேண்டும்.
    ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்த விவகாரத்தில் மத்திய அரசு செயல்பாடு வேதனை அளிக்கிறது. நாட்டில் ஜனநாயகத்தை அழிக்க மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநரின் நடவடிக்கையை ஏற்றுக் கொள்கிறாரா? சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாத எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்திருக்கிறார். 
    அப்படியானால், 118 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றிருக்கும் நாங்கள் பெரும்பான்மை இல்லையா? மேலும் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாள்கள் கால அவகாசத்தை ஆளுநர் கொடுத்திருக்கிறார். 15 நாள்கள் கால அவகாசம் கொடுத்தது ஏன்? என்பதை ஆளுநர் விளக்க வேண்டும். 
    அரசியலமைப்புச் சட்டத்தை காக்க வேண்டிய ஆளுநரே குதிரை பேரத்துக்கு வழிவகுத்திருக்கிறார்.
    பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுக்க அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற மத்திய அரசு துறைகள் மூலம் நெருக்கடி கொடுத்துவருகிறது. 
    காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங்கை அமலாக்கத் துறை மூலம் மிரட்டி வருகிறார்கள். ஆனந்த் சிங் மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரிடம் பேசிய ஆனந்த் சிங், தான் அமலாக்கத் துறை மூலம் பாஜகவினரால் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai