Enable Javscript for better performance
பெங்களூரில் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    ஆட்சியமைக்க பெரும்பான்மை பலம் இருந்தும் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு அழைப்பு விடுக்காமல், பாஜகவுக்கு வாய்ப்பு வழங்கிய கர்நாடக ஆளுநரின் முடிவைக் கண்டித்து, பெங்களூரு விதான செளதாவில் உள்ள காந்தி சிலை முன் காங்கிரஸ்,  மஜத எம்.எல்.ஏ.க்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.  முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
    கர்நாடகத்தில் மே 12-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.  அதன் முடிவுகள் மே 15-ஆம் தேதி வெளியாயின. இதில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 38 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். 
    எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாததால்,   மஜத தலைமையில் காங்கிரஸ் கூட்டணி அமைத்து,  ஆட்சி அமைக்க உரிமை கோரியது.  தனிப்பெரும் கட்சியான பாஜகவும் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. 
    இந்த நிலையில்,  ஆட்சியமைக்க பாஜகவுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்ததையடுத்து,  வியாழக்கிழமை காலை 9 மணியளவில் பி.எஸ்.எடியூரப்பா மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றார்.
    இதை கண்டித்து,  விதான செளதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் காங்கிரஸ்,  மஜத கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா,  முன்னாள் முதல்வர் சித்தராமையா,  காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர்,  மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
    பிரதமர் நரேந்திர மோடி,  பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, முதல்வர் எடியூரப்பா ஆகியோரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai