Enable Javscript for better performance
விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: ஓரிரு நாள்களுக்குள் முடிவு அறிவிப்பு: முதல்வர் எடியூரப்பா- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: ஓரிரு நாள்களுக்குள் முடிவு அறிவிப்பு: முதல்வர் எடியூரப்பா

    By DIN  |   Published on : 18th May 2018 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வது தொடர்பாக ஓரிரு நாள்களுக்குள் அறிவிப்பு வெளியிடுவேன் என்றார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.
    பெங்களூரு விதான செளதாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
    தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள ரூ. ஒரு லட்சம் வரையிலான பயிர்க்கடன்,  நெசவாளர்கள் பெற்றுள்ள ரூ.ஒரு லட்சம் வரையிலான கடன் தொகையை தள்ளுபடி செய்வதாக பாஜக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
    அதன்படி,  கடன் தொகையைத் தள்ளுபடி செய்வது குறித்து ஓரிரு நாள்களில் முடிவெடுத்து,  அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.  கடன் தள்ளுபடி குறித்து தலைமைச்செயலாளரிடம் விவரம் கேட்டிருக்கிறேன். தலைமைச் செயலாளரிடம் இருந்து விவரம் கிடைத்தவுடன் கடன் தொகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.
    அமைச்சரவை விரிவாக்கம்
    சட்டப்பேரவையில் எனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வஜுபாய் வாலா, 15 நாள்கள் கால அவகாசம் அளித்துள்ளார்.  சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு அமைச்சரவையை விரிவாக்கம் செய்வேன்.  பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, பாஜக முன்னணித் தலைவர்கள் கலந்துகொள்ளும் வகையில் பிரம்மாண்டமான விழா நடத்தி அமைச்சரவையை விரிவாக்கம் செய்வேன். 
    கர்நாடகத்தின் முதல்வராக மூன்றாவது முறையாகப் பதவியேற்கிறேன்.  இதற்கு காரணமான கர்நாடக மக்கள், அதிலும் குறிப்பாக விவசாயிகள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  கர்நாடக மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து, ஆதரித்துள்ளனர். 
    மனசாட்சிப்படி ஆதரவு
    மக்களின் ஆதரவு பாஜகவுக்கு இருந்த போதும்,  மக்களால் நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ்,  மஜத கட்சியினர் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை அமைத்துக் கொண்டு ஆட்சியில் அமர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
    1960-களின் முன்பகுதியில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஒருவரை நிறுத்தியிருந்த போதும்,  சுயேச்சையாக நிறுத்தப்பட்ட வி.வி.கிரிக்கு மனசாட்சிப்படி வாக்களிக்கும்படி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி வேண்டுகோள் விடுத்ததை யாரும் மறந்துவிடவில்லை.  
    கர்நாடகமக்கள் அளித்துள்ள தீர்ப்பின்படி,  நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எனக்கு ஆதரவாக மனசாட்சிப்படி வாக்களிக்கும்படி காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களைக் கேட்டுக் கொள்கிறேன். 
    சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பது குறித்து வினா தொடுக்க வேண்டாம்.  இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதால், அதுகுறித்து பேசுவது சரியல்ல.  உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கும் வரை காத்திருங்கள் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai