மாநகராட்சிக்குள் படப்பிடிப்பு: விசாரணைக்கு மேயர் உத்தரவு

பெங்களூரு மாநகராட்சிக்குள் தமிழ்த் திரைப்படம் எடுக்க அனுமதி வழங்கியது

பெங்களூரு மாநகராட்சிக்குள் தமிழ்த் திரைப்படம் எடுக்க அனுமதி வழங்கியது தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மேயர் கங்காம்பிகே தெரிவித்தார்.
அண்மையில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படத்தின் பல காட்சிகள் பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மேயர் கங்காம்பிகே வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: அண்மையில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் தமிழ்த் திரைப்படத்தின் ஒருசிலக் காட்சிகள் பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் படமாக்கப்பட்டுள்ளது. 
இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. சம்பந்தப்பட்ட திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மாநகராட்சி காட்சிகளைப் பார்த்த பின்னர் உரிய விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார். மாநில பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியது: 
பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் பல பாதுகாப்பான ரகசிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் திரைப்படத்தை படமாக்க யார் அனுமதி வழங்கியது என்பது தெரியவில்லை. இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற வேண்டும். விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலக வளாகத்தில் தமிழ்த் திரைப்படம் படமாக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் கூட்டணி: ராகுல் காந்தியை சந்திக்க முதல்வர் குமாரசாமி முடிவு
பெங்களூரு, நவ. 8:  வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்து அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைச் சந்திக்க, முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளார்.
கர்நாடகத்தில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ்- மஜத கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, தில்லிக்குச் சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்திக்க முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளார். சந்திப்பின்போது, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளார். 
காங்கிரஸ், மஜத கட்சிகள் கூட்டணி வைத்துக் கொண்டால் மட்டுமே, பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முடியும் என்பதில் குமாரசாமி உறுதியான நம்பிக்கை வைத்துள்ளார். இதனை வலியுறுத்தும் விதமாக குமாரசாமியைச் சந்திக்க முடிவு செய்துள்ள ராகுல் காந்தி விரைவில் தில்லிக்கு வருமாறு குமாரசாமிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து அடுத்த வாரம் தில்லி சென்று ராகுல் காந்தியைச் சந்தித்து பேச குமாரசாமி முடிவு செய்துள்ளார். கர்நாடகத்தில் பாஜக வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம் தென்னிந்தியாவில் அக்கட்சி வளர்ச்சியடைவதை முழுமையாக தடுக்க முடியும் என்று குமாரசாமியும், அவரது தந்தை முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவும் நம்புகின்றனர். 
எனவே, அடுத்த வாரம் தில்லி செல்லும் முதல்வர் குமாரசாமி, ராகுல் காந்தியிடம் மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்த அவசியத்தை புரிய வைக்க முடிவு செய்துள்ளார். முதல்வர் குமாரசாமி தில்லிக்கு பயணம் மேற்கொள்ளும்போது, அவருடன் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோரையும் அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார். சந்திப்பின் போது அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் பேச திட்டமிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com