கிருஷ்ணராஜ சாகர் அணையைப் பாதுகாக்க திட்டம் தேவை: மாநில நீர்வளத் துறைக்கு மண்டியா மாவட்டம் பரிந்துரை

காவிரி அணையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையைப் பாதுகாக்கும்

காவிரி அணையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையைப் பாதுகாக்கும் திட்டத்துக்கு தனிக்குழு அமைக்க மாநில நீர்வளத் துறைக்கு மண்டியா மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.
மண்டியா மாவட்டத்தில் பாய்ந்தோடும் காவிரி ஆற்றின் குறுக்கே 1938-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் அணை பெங்களூரு, மண்டியா, மைசூரு மாவட்டங்களுக்கு பாசனம், குடிநீர் வழங்கும் ஆதாரமாக விளங்குகிறது.
வேளாண் மாவட்டமாக விளங்கிய மண்டியாவில் அண்மைக்காலமாக தொழில்நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. கனிமங்கள் அதிகளவில் காணப்படுவதால் சுரங்கத் தொழில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இது கிருஷ்ணராஜசாகர் அணையின் பாதுகாப்புக்கு ஊறுவிளைப்பதாக அமைந்துள்ளது. 
கடந்த செப்.25-ஆம் தேதி கிருஷ்ணராஜ சாகர் அணைப்பகுதியில் திடீரென இடி சத்தம் கேட்டது. சுரங்கப் பணியால் இச்சத்தம் கேட்டதாகக் கூறப்பட்டது. எனினும், இதை உறுதிசெய்ய முடியவில்லை. இந்நிலையில், கிருஷ்ணராஜ சாகர் அணையின் பாதுகாப்பு குறித்து கர்நாடக மாநில இயற்கைபேரிடர் கண்காணிப்பு மையம் கவலை தெரிவித்துள்ளது. 
அம்மையத்தின் இயக்குநர் ஸ்ரீனிவாச ரெட்டி கூறுகையில்,
நமது நாட்டின் பழமையான கிருஷ்ணராஜ சாகர் அணையைப் பாதுகாக்கும் வகையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மண்டியா மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளோம். 
ரிக்டர் அளவு 6 வரையிலான நிலநடுக்கத்தை தாங்கக்கூடிய அளவுக்கு அணை பலமாக
கட்டப்பட்டுள்ளது. 
ஆனாலும், அணை பழையதாகி வருவதால், அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கையோடு இருப்பதில் தவறில்லை.
அணையின் 7 கிமீ சுற்றுவட்டத்தில்தான் ஹெப்பாள் தொழில்பேட்டை அமைந்துள்ளது. அங்கு செயல்பட்டுவரும் தொழில் நிறுவனங்களால் அணைக்கு இதுவரை எவ்வித பாதிப்பும் இல்லை. 
எனினும், நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நடவடிக்கைகளை அணையின் சுற்றுவட்டத்தில் இருந்து 15-20 கிமீ தொலைவுக்கு அனுமதிக்கக்கூடாது என்று மண்டியா மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளோம். 
அணையில் இருந்து 20 கி.மீ சுற்றுவட்டத்துக்கு சுரங்கப் பணிகளை மண்டியா மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. அதேபோன்றதொரு நடவடிக்கையை எடுக்குமாறு மைசூரு மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டுள்ளோம்' என்றார்.
மண்டியா மாவட்ட ஆட்சியர் மஞ்சுஸ்ரீ கூறுகையில்,"அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20 கி.மீ தொலைவுக்கு சுரங்கப் பணிகளுக்கு தடை விதித்துள்ளோம். அணையின் கட்டுமானத்தை பாதிக்கக்கூடிய எந்தவகையான நடவடிக்கைகளையும் அனுமதிக்காமல் இருக்க இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. 
அதுகுறித்து விரிவான அறிக்கையை அளிப்பதற்கு குழு ஒன்றை அமைக்குமாறு மாநில நீர்வளத் துறைக்கு பரிந்துரைத்துள்ளோம். இதன்மீது நீர்வளத் துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
அணையை அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு செய்வது, ஏதாவது பழுது ஏற்பட்டால் அதை உடனடியாக சீர்செய்வது, ஒட்டுமொத்தமாக அணையைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம்,
பரிந்துரைத்துள்ளது. 
கிருஷ்ணராஜ சாகர் அணை பாதுகாப்புக் குழு, அணையில் இருந்து 20 கி.மீ தொலைவிலான சுற்றுவட்டத்தை ஆய்வுசெய்து, அணையின் பாதுகாப்பு கருதி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கைகளையும் பரிந்துரைக்க இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com