சபரிமலை விவகாரம்: பெங்களூரில் நாளை ஊர்வலம்

சபரிமலைக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி வழங்கியது குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பாக

சபரிமலைக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி வழங்கியது குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பாக கேரள அரசு மேல்முறையீடு  செய்யக்கோரி அக். 14-ஆம் தேதி பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் ஐயப்ப பக்தர்களின் ஊர்வலம்  நடைபெற உள்ளது.
இதுகுறித்து நடிகரும், தயாரிப்பாளருமான சிவராம் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த 400 ஆண்டுகளாக கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒரு மண்டலம் விரதமிருந்து நெறிமுறைகளைக் கடைப்பிடித்து சென்றுவருவதை ஐயப்ப பக்தர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
ஆனால் அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பெண்களும் அங்கு சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வரும் சில நெறிமுறைகளை மீறும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது வேதனை அளிக்கிறது. மதச் சம்பிரதாயத்தில், சட்டத்தை நுழைப்பது முறையல்ல. முறையாக விரதத்தை கடைப்பிடித்து சபரிமலைக்கு செல்லும் கோடான கோடி பக்தர்களை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மக்களுக்காக சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் வாழ்வியலை மாற்றிக் கொள்ளமுடியாது என்பதனை உச்சநீதிமன்றம் உணரவேண்டும். சபரிமலைக்கு பெண்கள் செல்வது தொடர்பான தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி அக். 14-ஆம் தேதி பெங்களூரு சுதந்திரப் பூங்காவிலிருந்து ஐயப்ப பக்தர்கள் நடைபயணம் மேற்கொண்டு, ஆளுநரிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளோம் என்றார். பேட்டியின் போது பெங்களூரு பத்திரிகையாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் கிரிஷ்குமார், இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com