முழு அடைப்பு: கோலார் தங்கவயலில் அமைதியாக நடைபெற்றது
By DIN | Published on : 11th September 2018 09:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் கோலார் தங்கவயலில் அமைதியான முறையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்தும், விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.
இதனடிப்படையில், கோலார் தங்கவயலில் காங்கிரஸ், மார்க். கம்யூ., மஜத ஆகிய கட்சிகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோலார் தங்கவயலில் ராபர்ட்சன்பேட்டை பகுதியில் சூரஜ்மல் சதுக்கத்தில் திங்கள்கிழமை தொகுதி எம்.எல்.ஏ. ரூபகலா தலைமையில் திரண்ட காங்கிரஸ் கட்சியினர், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அவரது தலைமையில் காங்கிரஸார் முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலம் சென்றனர்.
இதனிடையே, முன்னாள் எம்.எல்.ஏ. மு.பக்தவச்சலம் தலைமையில் மஜதவினர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் தங்கராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோலார் தங்கவயலில் முழு அடைப்புப் காரணமாக அங்காடிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்து, ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து நிறைந்த சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.