வெள்ளச் சேதம்: கர்நாடகத்தில் மத்திய குழு ஆய்வு

கர்நாடகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மத்திய அரசின் இரண்டு குழுக்கள் ஆய்வு செய்தன.

கர்நாடகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மத்திய அரசின் இரண்டு குழுக்கள் ஆய்வு செய்தன.
கர்நாடகத்தில் குடகு, ஹாசன், தென்கன்னடம், சிக்கமகளூரு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடந்த மாதம் பலத்த மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டு, ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பயிர்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாக கர்நாடக அரசின் முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் குமாரசாமி தலைமையிலான குழுவினர், வெள்ளசேதங்களை ஆய்வு செய்வதற்கு ஆய்வுக் குழுவை அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். 
அதன்படி, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மத்திய அரசின் இரு குழுக்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனர். 
மத்திய உள் துறை இணைச் செயலாளர் அணில்மாலிக் தலைமையில் மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்புப் பொறியாளர் ஜிதேந்திர பன்வார், மத்திய வேளாண் துறை இணை இயக்குநர் பொன்னுசாமி ஒரு குழுவினர் புதன்கிழமை குடகு மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். 
பெங்களூரில் இருந்து புறப்பட்ட இக்குழு ஹாரங்கி சென்று, அங்கிருந்து சோம்வார்பேட் வட்டத்தின் ஹட்டிஹொளே கிராமத்துக்குச் சென்றனர். அங்கு உள்கட்டமைப்பு சேதங்கள், பயிர் சேதங்களைப் பார்வையிட்டனர். பின்னர், முக்கூட்லு பகுதிக்குச் சென்று, அங்கிருந்து ஜம்பூருக்குச் சென்ற குழுவினர் தோட்டக்கலை சேதங்களை ஆய்வு செய்தனர். 
ஆட்சியருடன் சந்திப்பு
அதன்பிறகு மடிக்கேரிக்குச் சென்ற மத்திய ஆய்வுக் குழுவினர், அங்கு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வெள்ள சேதங்கள் குறித்து கேட்டறிந்தனர். இக்குழுவினர் வியாழக்கிழமை ஹெப்பட்டகெரி பகுதியில் உள்ள சண்முகா, குமாரசாமி காலனியில் ஏற்பட்டுள்ள உள்கட்டமைப்பு சேதங்களைப் பார்வையிடுகிறார்கள். 
அதன்பிறகு, தேவஸ்தூர் பள்ளி சந்திப்புக்கு சென்று அங்கு உள்கட்டமைப்பு சேதம், பயிர் சேதங்களை ஆய்வு செய்கிறார்கள். அதன்பிறகு தந்திபாலா பாலம், கலூர் சாலை, மண்டலப்பட்டி, குந்தரகோடி, மடே கிராமம், மொன்னன்கெரே பகுதிகளுக்குச் சென்று அங்கும் வெள்ள சேதங்களைப் பார்வையிட்டு, மதிப்பிடுகிறார்கள். 
தென் கன்னடத்தில் ஆய்வு
இதேபோல, மத்திய நிதித் துறை துணைச் செயலாளர் பர்தெந்துகுமார் சிங் தலைமையில் மத்திய ஊரகமேம்பாட்டுத் துறை துணைச் செயலாளர் மாணிக்சந்திரபண்டித், மத்திய தரைவழிப் போக்குவரத்துக் கழக மண்டல அதிகாரி சதானந்த்பாபு ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் புதன்கிழமை தென்கன்னட மாவட்டத்தில் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து மங்களூரு சென்ற மத்திய ஆய்வுக் குழுவினர் அங்கிருந்து உடுப்பி சென்று, முல்கி, அட்யபாடி, பஜ்பே ஆகிய இடங்களில் பயிர்சேதம் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களைப் பார்வையிட்டு, பின்னர் மங்களூரில் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, வெள்ள சேதங்கள் குறித்த மதிப்பீடுகளை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தனர். 
மங்களூரில் இரவு தங்கும் ஆய்வுக் குழுவினர் வியாழக்கிழமை பண்ட்வால் வட்டத்தின் மூலார்பட்டனா, விட்லபண்டூரு, கணியூர், கல்லஜே, சுப்ரமணியா, குண்டியா ஆகிய பகுதிகளை ஆய்வு செய்து பயிர்சேதங்களை மதிப்பிடுகிறார்கள்.
முதல்வருடன் ஆலோசனை
இந்த இரு குழுவினரும் வெள்ளிக்கிழமை (செப்.14) பெங்களூருக்கு வந்து, முதல்வர் குமாரசாமி, தலைமைச் செயலாளர் டி.எம்.விஜய்பாஸ்கர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வெள்ளசேதங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்கள். அதன்பிறகு தில்லி திரும்பும் இக்குழுவினர், வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க
விருக்கிறார்கள். 
அதனடிப்படையில், வெள்ள நிவாரண உதவிகளை மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக ரூ.1,190 கோடி நிவாரண நிதியுதவியை மத்திய அரசிடம் கர்நாடக அரசு
கேட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com