கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி

மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக முதல்வர் குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.

மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக முதல்வர் குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து பெங்களூரு கிருஷ்ணா அரசு இல்லத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க சதி நடந்து வருகிறது. கூட்டணி அரசை காத்துக் கொள்ள என்ன செய்யவேண்டுமோ அதை நான் செய்வேன். சதி செயலில் உள்ள பின்னணி குறித்து அறிவேன். கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜகவின் முயற்சி பலனளிக்காது. பாஜக தலைவர்களுக்கு மாநிலத்தின் வளர்ச்சி குறித்து கவலையில்லை. மாறாக, எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. 
ஆனால், எடியூரப்பா ஆட்சி அமைப்பது அசாத்தியமாகும். பாஜகவினரின் முயற்சியை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். பணம், பதவி ஆசையைக் காட்டி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக திட்டமிட்டுள்ளது. முந்தைய பாஜக ஆட்சியில் பெங்களூரு மாநகராட்சியில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை தீயிட்டு கொளுத்தியவர்கள், தற்போது கூட்டணி அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறார்கள்.
அரசைக் கவிழ்க்க மேற்கொண்டிருக்கும் முயற்சியால் நான் துவண்டுவிடவில்லை. அது, ஊடகங்களில் தலைப்புச்செய்தியாகும் என்பது மட்டும் தெரியும். விநாயகர் சதுர்த்திக்கு ஆட்சியை கவிழ்க்க விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிந்துள்ளது. அடுத்து அக்.2 அல்லது தசரா விழா என்று காலக்கெடு விதிக்கப்படலாம். யார் எதில் கவனம் செலுத்தினாலும், நான் மாநிலத்தின் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்துவேன். செப்.17-ஆம் தேதியில் இருந்து அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். ஆட்சி கவிழ்ப்பு செய்திகளால் வளர்ச்சிப் பணிகளில் அலட்சியம் காட்டிவரும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி உள்ளிட்ட எல்லா அமைச்சர்களும் என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்கள். பாஜகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களும் எனது தொடர்பில் உள்ளனர். ஒருசில பாஜக எம்எல்ஏக்களுடன் எனக்கு பழைய சம்பந்தம் உள்ளது. மைசூரு பகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏக்களை நான் தொடர்புகொள்ளவில்லை. 
பாஜகவில் இருந்து கட்சி தாவுவதாக ஊடகங்களில் வெளியாகும் பட்டியலில் யாரும் என்னுடன் தொடர்பில் இல்லை. பாஜக எம்எல்ஏக்களின் வேறு பட்டியல் என்னிடம் உள்ளது. நானாக எதையும் செய்யப்போவதில்லை. அதற்காக எதையும் செய்யாமல் இருக்கப்போவதுமில்லை. அரசைக் காப்பாற்றிக் கொள்ள எனக்கு தெரியும்.
அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டியது காங்கிரஸ் தலைவர்களின் பொறுப்பாகும். அதில் நான் தலையிடமாட்டேன். காங்கிரஸ் தேசிய கட்சி என்பதால் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com